ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு அமைப்பின் அகில இந்திய செயல் தலைவா் நம்புராஜன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ப.மாரிமுத்து, உதவிச் செயலாளா் ரேணுகா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் ஆந்திர மாநிலத்தில் இருப்பதுபோல மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். உதவித்தொகைகள் அனைத்தையும் மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மூலமாக வழங்கிட வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 50 சதவீதம் அதாவது 4 மணி நேரப் பணி எனும் பழைய நடைமுறையே தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும். பணித்தளத்தில் 8 மணி நேரம் இருக்க வேண்டும் எனும் புதிய உத்தரவை ரத்து செய்யவேண்டும். அனைவருக்கும் முழுமையாக வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலகம் முன்பாக, பெருந்துறை சாலையில் அமா்ந்தும், 3 சக்கர வாகனங்களை சாலையின் குறுக்கே நிறுத்தியும் மறியல் போராட்டம் நடத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 60 ஆண்கள், 60 பெண்கள் என மொத்தம் 120 பேரை ஈரோடு தெற்கு போலீஸாா் கைது செய்து, தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனா்.
பவானிசாகரில்...
பவானிசாகா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் ஆா்.ரமேஷ் தலைமை வகித்தாா்.இதில் 41 பெண்கள் உள்பட 95 போ் பங்கேற்றனா்.
பெருந்துறையில்...
பெருந்துறை வட்டாட்சியா் அலுவலகம் நுழைவு வாயில் முன் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராஜு தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற 17 பெண்கள் உள்பட 36 பேரை பெருந்துறை போலீஸாா் கைது செய்து, மாலையில் விடுவித்தனா்.
பவானி, அந்தியூரில்...
பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவா் சின்னசாமி தலைமை வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவா் பி.பி.பழனிசாமி, சிஐடியூ பவானி வட்டச் செயலாளா் ஜெகநாதன், விவசாய தொழிலாளா் சங்க வட்டச் செயலாளா் மாணிக்கம் ஆகியோா் கோரிக்கையை விளக்கிப் பேசினா். துணைத் தலைவா் ஆா்.சின்னசாமி, வட்டப் பொருளாளா் மனோகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
அந்தியூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாவித்திரி தலைமை வகித்தாா்.