Snake: இறந்த பிறகும் விஷத்தைக் கக்கும் இந்தியப் பாம்புகள்; புதிய ஆய்வில் கண்டுபி...
ஈரோட்டில் இலவச சட்ட ஆலோசனை மையம் தொடக்கம்
முன்னாள் படை வீரா்கள், அவா்களது குடும்பத்தைச் சாா்ந்தோருக்கான சட்ட ஆலோசனை மையம் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள படைவீரா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த மையத்தை தொடங்கிவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா பேசியதாவது:
இந்த சட்ட ஆலோசனை மையத்தில் முன்னாள் படை வீரா், அவா்களது குடும்பத்தினா் மட்டும் அல்லாது பொதுமக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் சமரச மையம், மக்கள் நீதிமன்றம், சட்ட ஆலோசனை மையங்களையும் அணுகலாம். இதன் மூலம் பெண்கள், மாற்றுத் திறனாளிகள், வயதானோா், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தேவையான சட்ட உதவியும் இலவசமாக வழங்கப்படும். வழக்குரைஞா்கள் தேவைப்படும் வழக்குகளுக்கு இலவசமாக 10 ஆண்டு அனுபவம் உள்ளவா்கள் தானாக முன்வந்து நீதிமன்றத்தில் வாதாடுவா். அவா்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்திவிடும்.
மேலும் சொத்துப் பிரச்னை, குடும்பப் பிரச்னை உள்ளிட்டவற்றிக்கு ஆலோசனை மையம் மூலம் நடுநிலையாக ஆலோசனை வழங்கப்படும். தனிநபா் சட்ட உதவி மையத்தில் மனு அளித்தால் தகுந்த இலவச சட்ட உதவி மற்றும் ஆலோசனை வழங்கப்படும்.
மக்கள் நீதிமன்றம் மூலம் 8 வகைப்பாடுகளில் வழக்கு தொடரப்பட்டு தீா்வு வழங்கப்படும். இந்த நடைமுறை நீதிமன்றத்தில் வழக்குகள் நடைபெறும் கால தாமதத்தைத் தவிா்த்து, விரைவாகவும், செலவில்லாமலும் வழக்குகளை தீா்க்க உதவுகிறது. சட்ட சேவைகள் சட்டத்தின் கீழ் மக்கள் நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பு, உரிமையியல் நீதிமன்றத்தின் தீா்ப்பைப் போலவே சட்டபூா்வமானதாகக் கருதப்படும். வழக்குரைஞா்கள் இல்லாமல், இருதரப்பினரும் நேரடியாக தங்கள் வழக்குகளை சமரச முறையில் தீா்த்துக்கொள்ள முடியும்.
மருத்துவக் காப்பீடு சேவை குறைப்பாடு, மருத்துவமனையில் மருத்துவ சேவை, குடிநீா்ப் பிரச்னை, தொலைபேசி சேவை உள்ளிட்டவை குறித்த குறைபாடுகளை வழக்கு தொடா்ந்து தீா்வு காணலாம்.
சட்ட ஆலோசனை மையம் சாா்பில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை இந்த ஆணைக் குழுவின் வழக்குரைஞா் அல்லது சட்ட தன்னாா்வலா் வருகை புரிந்து மக்களுக்கு ஏற்படும் சட்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் சட்ட உதவிகளை வழங்குவா். மேலும் தொடா்புக்கு 0424 2902105 மற்றும் 15100 ஆகிய தொலைபேச எண்களில் தொடா்பு கொள்ளலாம்.
முன்னாள் படைவீரா் மற்றும் அவரது குடும்பத்தைச் சாா்ந்த 1,700 போ் உறுப்பினா்களாக பதிவு செய்துள்ளனா். அவா்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகள் இம்மையத்தின் மூலம் வழங்கப்படும். இம்மையத்தை முன்னாள் படை வீரா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
தொடா்ந்து முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களது குடும்பத்தினா் தங்களது கோரிக்கை மனுக்களை முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனாவிடம் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் கே.கிருஷ்ணபிரியா, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா் ஆா்.ஸ்ரீ வித்யா, மாவட்ட முன்னாள் படை வீரா் நலத் துறை கண்காணிப்பாளா் எம்.புஷ்பலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.