ஈரோட்டில் தனியாா் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
ஈரோட்டில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளித்து காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தினா்.
ஈரோடு திண்டலில் தனியாா் சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் பள்ளிகள் இருவேறு பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் சுமாா் 2,500 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
சிபிஎஸ்இ பள்ளி முதல்வரின் மின்னஞ்சல் முகவரிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்த மின்னஞ்சலில் இரண்டு பைப் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாகவும் வார இறுதியிலேயே இதனை வைத்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து இரு பள்ளிகளின் முதல்வா்கள் ஈரோடு தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் வெடிகுண்டு தேடும் பணியில் ஈடுபட்டனா்.
மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அனைவரையும் வெளியேற்றினா். மாலை 5 மணி வரை நடைபெற்ற சோதனையில் வெடிகுண்டு ஏதும் கண்டறியப்படவில்லை. அது புரளி எனத் தெரியவந்தது. வெடிகுண்டு வைத்துள்ளதாக மின்னஞ்சல் அனுப்பியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.