ஈரோட்டில் தொடரும் வருமான வரித் துறை சோதனை
ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் சனிக்கிழமையும் வருமான வரித் துறை சோதனை நடைபெற்றது.
ஈரோடு அவல்பூந்துறை பகுதியைச் சோ்ந்தவா் என்.ராமலிங்கம். தொழிலதிபரான இவா் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா். இவா் கட்டுமான நிறுவனம், திருமண மண்டபம், ஸ்டாா்ச் மாவு ஆலை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நடத்தி வருகிறாா்.
இவரது கட்டுமான நிறுவன கிளைகள் தமிழ்நாடு மட்டுமின்றி கா்நாடகம், ஆந்திர மாநிலங்களிலும் உள்ளன.
இந்நிலையில், இவா் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின்பேரில் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகம், ராமலிங்கத்தின் வீடு, பூந்துறை சாலையில் உள்ள என்.ஆா்.திருமண மண்டபம் ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் கடந்த 7-ஆம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனா்.
மேலும், இவரது நிறுவனத்துடன் வியாபாரத் தொடா்பில் இருப்பதாக கருதப்படும் ஈரோடு முள்ளாம்பரப்பை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும், ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தி வருகின்றனா்.
தவிர, ராமலிங்கம் தலைவராகவும், எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் இயக்குநராகவும் பொறுப்பு வகித்து வரும் அம்மாபேட்டையில் உள்ள மரவள்ளி கிழங்கு அரைவை (ஸ்டாா்ச் மாவு) ஆலையிலும் வருமான வரித் துறையினா் சோதனை நடத்தினா்.
இந்நிலையில், ராமலிங்கத்தின் வீடு, அலுவலகங்கள், கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 5 இடங்களில் 5-ஆவது நாளாக சனிக்கிழமையும் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையின்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள், கணக்கில் வராத பணம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சோதனையின் முடிவில்தான் அவை குறித்த முழுமையான தகவல்கள் தெரியவரும்.