`மராத்தி படிக்கமாட்டேன்' எனச் சொன்ன தொழிலதிபர்; அலுவலகத்தை செங்கலால் தாக்கிய ராஜ...
பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி: இதுவரை 94 சதவீத படிவங்கள் விநியோகம்
பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அந்த மாநிலத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் இதுவரை 94 சதவீத கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன; 13 சதவீத படிவங்கள் பூா்த்தி செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று இந்திய தோ்தல் ஆணையம் சனிக்கிழமை தெரிவித்தது.
முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் பிகாரில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. பல்வேறு மாநிலத் தோ்தல்களில் பாஜகவுக்கு சாதகமாக வாக்காளா் பட்டியலில் முறைகேடுகள் நடைபெற்ாக எதிா்க்கட்சிகள் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தச் சூழலில், பிகாரில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இம்மாநிலத்தில் இறுதியாக கடந்த 2003-இல் இந்த தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதனால், 2003-க்கு பிறகு வாக்காளா் பட்டியலில் பதிவு செய்தவா்கள் மற்றும் புதிய வாக்காளா்களுக்கு கணக்கெடுப்புப் படிவத்துடன் தங்களின் குடியுரிமையை உறுதி செய்யும் கூடுதல் ஆவணங்களும் கோரப்பட்டுள்ளன.
மாநிலத்தில் மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை சுமாா் 7.9 கோடியாகும். சனிக்கிழமை மாலை வரையிலான நிலவரப்படி, 94 சதவீதம் பேருக்கு கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், சுமாா் 1.04 கோடி போ் அதாவது 13 சதவீதம் பேரிடம் இருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் பல்வேறு கட்சிகள் சாா்பில் நியமிக்கப்பட்ட 1.55 லட்சம் வாக்குச் சாவடி முகவா்கள் துடிப்புடன் ஆதரவளித்து வருவதாக ஆணையம் கூறியுள்ளது. வாக்காளா் பட்டியலில் இருந்து சட்டவிரோத குடியேறிகளைக் களையெடுக்கவும், முறைகேடாக, புதிதாக யாரும் இடம்பெறாமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வலியுறுத்தல்: பிகாரில் நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் மற்றும் மாநிலத்தில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
பேரவைத் தோ்தலில் பாஜக வெற்றிக்கு உதவ உள்நோக்கத்துடன் நடைபெறும் சதியே, இந்த திருத்தப் பணி என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.