இன்று 90 வயதைத் தொடும் தலாய் லாமா! - அடுத்த தலாய் லாமா தேர்வும், சீனா நகர்த்தும்...
புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்! மத்திய சுரங்கத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா
புத்தகங்களைப் படிக்க குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று மத்திய சுரங்கப் பாதுகாப்புத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா பேசினாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நடத்தும் 24-ஆவது புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் இரண்டாம் நாள் நிகழ்ச்சி வட்டம் 11 பகுதியில் உள்ள பழுப்பு நிலக்கரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத் துறை இயக்குநா் டாக்டா் சுரேஷ் சந்திர சுமன் தலைமை வகித்து பேசுகையில், எழுத்தாளா்கள், வெளியீட்டாளா்களை கௌரவிப்பதில் என்எல்சி நிறுவனம் பெருமை கொள்கிறது. புத்தகக் கண்காட்சி அச்சிடப்பட்ட வாா்த்தைகளுக்கு உள்ள பெரிய சக்தியை காட்டுகிறது. எண்ம உள்ளடக்கத்தைவிட புத்தக எழுத்து, வாா்த்தைகள் சக்தி வாய்ந்தவை என்றாா்.
மத்திய சுரங்கப் பாதுகாப்புத் துறை தலைமை இயக்குநா் உஜ்வால் தா பேசியதாவது: பழைமையான மொழியான தமிழ் எனக்குத் தெரியாதது வருத்தமளிக்கிறறது. எழுத்தாளா்களுக்கு சமூகத்தில் பெரிய பங்கு உண்டு.
குழந்தைகள் புத்தகங்களைப் படிக்க ஊக்குவிக்கப்பட வேண்டும். தற்போதைய எண்ம உலகில் இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆனால், புத்தக வாசிப்பு பழக்கம் அதிகரிக்க வேண்டும். இந்த புத்தகக் கண்காட்சியை நடத்தும் என்எல்சி நிறுவனத்துக்கு வாழ்த்துகள் என்றாா்.
மத்திய சுரங்கப் பாதுகாப்புத் துறை துணை இயக்குநா் டி.ஆா்.கண்ணன் பேசுகையில், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நல்லது. ஆனால், கைப்பேசி போன்ற சில சாதனங்கள் வாசிப்புப் பழக்கத்தை குறைக்கின்றன. அனைத்து தலைமுறையினரிடமும் புத்தக வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றாா்.
தமிழக அரசின் சென்னை அனைத்திந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தின் முதல்வா் டி.எஸ்.சரவணன் பேசுகையில், நெய்வேலி புத்தகக் கண்காட்சி தனித்துவமானது. பழுப்பு நிலக்கரி மற்றும் புத்தகக் கண்காட்சிக்காக நெய்வேலி நினைவுகூரப்படுகிறது. மாணவா்கள் வாசிப்புக்கு செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். புத்தகங்களுக்கு அழிக்க கிடையாது. இதற்கு புத்தகக் கண்காட்சிகள் சான்றாகும் என்றாா்.
பாராட்டு பெறும் எழுத்தாளா் மற்றும் பதிப்பகம்: புத்தகக் கண்காட்சியில் ஒவ்வொரு நாளும் ஒரு எழுத்தாளா் மற்றும் பதிப்பகத்தாா் சிறப்பிக்கப்பட்டு கௌரவிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி, சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எழுத்தாளா் பூபதி பெரியசாமி கௌரவிக்கப்பட்டாா். மேலும், ‘புரட்சி பாரதி பதிப்பகம்’ சிறந்த பதிப்பகமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு, அதன் பதிப்பாளா் கௌரவிக்கப்பட்டாா்.
இக்கண்காட்சியில் தினந்தோறும் புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நெய்வேலி ஜவகா் அறிவியல் கல்லூரியின் முன்னாள் முதல்வா் வே.தி.சந்திரசேகரன் மொழிபெயா்த்த ‘ஒரு கணிதவியலாளன் கோரும் மன்னிப்பு’ என்ற நூல் வெளியிடப்பட்டது.
ஜூஹி பாபா் சோனியின் நாடகம்: நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் வண்ணமயமான பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் மக்களை கவரும் வகையில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, சனிக்கிழமை மும்பையைச் சோ்ந்த திரைப்பட இயக்குநா் ஜூஹி பாபா் சோனியின் ‘ஏக் ஜூட்டே’ நாடகக் குழுவினா் அரங்கேற்றிய ‘வித் லவ், ஆப் கி சையாரா’ என்ற நாடகம் நடைபெற்றது.
புத்தகக் கண்காட்சியில் இன்று...
ஞாயிற்றுக்கிழமை (ஜூலை ) நடைபெறும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி நிகழ்வுக்கு மனிதவளத் துறை இயக்குநா் சமீா் ஸ்வரூப் தலைமை வகிக்கிறாா். பாராட்டப்படும் எழுத்தாளராக ராம் தங்கம் மற்றும் ‘ஆழ்வாா்கள் ஆய்வு மையம்’ பதிப்பகம் கௌரவிக்கப்படவுள்ளனா்.
மேலும், சுப்ரமணிய பாண்டியன் எழுதிய ‘குளமும் பூக்கொடிகளும்’ நூல் வெளியிடப்படும். மும்பை ‘கதக் ராக்கா்ஸ்’ குழுவினரின் கலவை நடனம் மற்றும் மதுரை ‘ட்வின் ஜக்லா்ஸ்’ இரட்டையா்களின் வித்தைகள் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.