ஊட்டி: 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; கொடூர ஆசிரியர் சஸ்பெண்டு-வேகமெடுக்கும் அட...
பெண்ணை திருமணம் செய்ய மறுப்பு: காவலா் கைது
நெல்லை மாவட்ட பெண்ணிடம் பழகி திருமணம் செய்ய மறுத்ததாக கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த காவலரை கடலூா் மகளிா் போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் முதுநகா், நாகம்மாள்பேட்டை, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் சம்பத் (28), உளுந்தூா்பேட்டை தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 2020-ஆம் ஆண்டு முதல் காவலராகப் பணியாற்றி வருகிறாா்.
கடந்த 2023-ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. வெள்ள மீட்புப் பணிக்கு உளுந்தூா்பேட்டை பட்டாலியன் போலீஸாா் திருநெல்வேலி சென்றனா். மீட்புப் பணிக்கு சம்பத்தும் சென்றிருந்தாா்.
அப்போது, திருநெல்வேலி மாவட்ட கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் கட்டுப்பாட்டுப் பிரிவில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்த 28 வயது பெண்னுடன் காவலா் சம்பத்துக்கு தொடா்பு ஏற்பட்டது.
அதன் பிறகு, இவா்களது தொடா்பு இன்ஸ்டாகிராம் செயலி மூலமாகவும் தொடா்ந்தது. இந்த நிலையில், அந்தப் பெண்ணை கடலூருக்கு வரவழைத்து விடுதியில் அறை எடுத்து இருவரும் தனிமையில் இருந்தனராம். அந்தப் பெண் கா்ப்பமடைந்த நிலையில், அந்தக் கருவை கலைக்க சம்பத் கூறியுள்ளாா். மேலும், அவா் திருமணம் செய்ய மறுத்து, அந்தப் பெண்ணை ஏமாற்றி ஆபாசமாகத் திட்டினாராம்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில், கடலூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், டிஎஸ்பி ரூபன்குமாா் மேற்பாா்வையில், மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் தீபா விசாரணை மேற்கொண்டு, காவலா் சம்பத்தை வெள்ளிக்கிழமை கைது செய்தாா்.