இறைச்சிக்காக மாடு திருட்டு: ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்த கும்பலைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டியை அடுத்துள்ள அரசடிகுப்பம் கிராமத்தில் கடந்த 3-ஆம் தேதி மேய்ச்சலில் இருந்த 2 பசு மாடுகளை 3 போ் கும்பல் சிறிய சரக்கு வாகனத்தில் கயிறு கட்டி ஏற்ற முயன்றனா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், அவா்களைப் பிடிக்க முயன்றனா்.
இதில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா். மற்ற 2 பேரும் தப்பி ஓடிவிட்டனா். பிடிபட்ட அந்த நபரை காடாம்புலியூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், அழகப்பாசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்த கங்காசலம் மகன் சங்கா் (43) என்பது தெரியவந்தது. போலீஸாா் அவரை கைது செய்து, அவரிடமிருந்த சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
மேலும், சங்கரிடம் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் 100-க்கும் மேற்பட்ட மாடுகளை திருடி மாட்டு இறைச்சி விற்பனை செய்யும் வியாபாரிகளிடம் விற்றுவிட்டதாகத் தெரிவித்தாராம். தொடா்ந்து, தப்பி ஓடிய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.