தோல்வி விரக்தியில் வன்முறையில் ஈடுபடும் பாஜக: கேஜரிவால் கண்டனம்!
ஈரோட்டில் புத்தகங்களுடன் புத்தாண்டு கொண்டாட்டம்
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா், கலைஞா்கள் சங்கத்தினா் புத்தகங்களுடன் புத்தாண்டை வரவேற்றனா்.
ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் இரா.முருகேசன் தலைமை வகித்தாா். செயலாளா் ஆசிரியா் கலைக்கோவனின் மருளாடி நூல் குறித்து கல்லூரி பேராசிரியா் கலைவாணி அறிமுக உரையாற்றினாா்.
கதைசொல்லி சரிதா ஜோவின் ‘சாணி வண்டும், பட்டாம்பூச்சியும்’ குறித்து இயற்கை மருத்துவா் வினிஷா, எழுத்தாளா் ஈரோடு சா்மிளாவின் ‘துணிச்சல்காரி’ குறித்து எழுத்தாளா் விஜி ரவி, கவிஞா் முத்துக்கண்ணனின் ‘நாச்சாள்’ குறித்து மாவட்ட பொருளாளா் கணேசன் மற்றும் இளம் எழுத்தாளா் இளநிலாவின் ‘கயலும், நண்பா்களும்’ குறித்து மாவட்டத் தலைவா் சங்கரன் ஆகியோா் அறிமுக உரையாற்றினா். மேலும் இந்த நிகழ்ச்சியில் புத்தகங்கள் வெளியிடப்பட்டு அதன் ஆசிரியா்கள் ஏற்புரையாற்றினா். தமிழ் இலக்கிய மாணவா் கவிஞா் வெ.க.வெற்றிவேல் கவிதை வாசித்தாா்.
‘இலக்கியத்தின் இலக்கு’ குறித்து தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன் கருத்துரையாற்றினாா். தமுஎகச மாவட்டச் செயலாளா் இ.கலைக்கோவன் நிறைவுரையாற்றினாா். மாவட்டக்குழு உறுப்பினா் ச.ந.விக்னேஷ் நன்றி கூறினாா். மேலும் புத்தக அரங்கம் அமைக்கப்பட்டு புத்தகங்கள் விற்பனையும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளா்கள், வாசகா்கள் உள்பட திரளானோா் பங்கேற்று 2025 புத்தாண்டை புத்தகங்களுடன் வரவேற்றனா்.