இன்ஸ்டாகிராமில் பின்தொடர்வோர் குறைந்ததால் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்!
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் அரசமைப்புச்சட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது: மக்களவையில் மத்திய அரசு தகவல்
உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம் அரசமைப்புச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது என்று மக்களவையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக கரூா் தொகுதி காங்கிரஸ் எம்பி எஸ்.ஜோதிமணி எழுத்துபூா்வமாக எழுப்பிய கேள்வியில், ‘நீதித்துறையில், குறிப்பாக
உயா்நிலைகளில் அதிக பெண்களைச் சோ்ப்பதற்கான இடஒதுக்கீட்டை அறிமுகப்படுத்த அல்லது சிறப்பு சலுகைகளை அறிமுகப்படுத்த அரசாங்கத்திடம் ஏதேனும் திட்டம் உள்ளதா?‘ என்று கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மக்களவையில் மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை இணை அமைச்சா் (தனிப் பொறுப்பு) அா்ஜுன் ராம் மேக்வால் வெள்ளிக்கிழமை எழுத்துபூா்வமாக தாக்கல் செய்த பதிலில் தெரிவித்திருப்பதாவது:
உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள் நியமனம் இந்திய அரசமைப்புச்சட்டத்தின் பிரிவுகள் 124, 217 மற்றும் 224-இன் கீழ் செய்யப்படுகிறது. இந்தப் பிரிவுகள் எந்தவொரு சாதி அல்லது வகுப்பினருக்கும் இடஒதுக்கீட்டை வழங்கவில்லை.
நியமன நடைமுறை குறிப்பாணையின்படி, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுகளைத் தொடங்குவதற்கான பொறுப்பு இந்திய தலைமை நீதிபதியிடம் உள்ளது.
அதே நேரத்தில் உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுகளைத் தொடங்குவதற்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடம் உள்ளது.
இருப்பினும், நீதித்துறையில் சமூக பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. மேலும் நீதிபதிகளை நியமிப்பதற்கான முன்மொழிவுகளை அனுப்பும்போது, உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளை நியமிப்பதில் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்வதற்காக, பட்டியலிடப்பட்ட சாதிகள், பட்டியலிடப்பட்ட பழங்குடியினா், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பெண்களைச் சோ்ந்த பொருத்தமான நபா்களுக்கு உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்து வருகிறது.
உச்சநீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட நபா்கள் மட்டுமே உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்றங்களின் நீதிபதிகளாக நியமிக்கப்படுகிறாா்கள் என்று அந்த பதிலில் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.