What to watch on Theatre: நாங்கள், டென் ஹவர்ஸ், Sinners - இந்த வாரம் என்ன பார்க்...
உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!
உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கடந்த வாரம் வழங்கப்பட்டுள்ள உச்சநீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது. மேலும், மசோதாக்கள் மீது முடிவெடுக்க ஆளுநருக்கு 30 நாள்கள் முதல் மூன்று மாதங்கள் வரை காலக்கெடுவும் நிா்ணயிக்கப்பட்டது. தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்ற இத்தீா்ப்பை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
இதனைத்தொடர்ந்து, மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ள விவகாரத்தில், நீதித் துறை மீது குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் கடும் விமா்சனங்களை முன்வைத்துள்ளாா்.
இந்தநிலையில், உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது என்று கடுமையான சொற்களால் உச்சநீதிமன்றத்தை விமர்சித்துள்ளார் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் இன்று(ஏப். 19) அளித்துள்ளதொரு பேட்டியில் பேசியிருப்பதாவது: “நாட்டில் மதத்தின் பெயரால் போர்கள் உருவாக உச்சநீதிமன்றம்தான் காரணம். உச்சநீதிமன்றம் தமது வரம்புகளை மீறி செயல்படுகிறது.
எல்லா விஷயங்களுக்கும் ஒருவர் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டுமானால், நாடாளுமன்றத்தையும் சட்டப்பேரவையையும் மூட வேண்டியதுதான்” என்று பேசியுள்ளார்.