உச்சிப்புளி அருகே நீச்சல் குளத்தில் மூழ்கிய இளைஞா் உயிரிழப்பு; வலிப்பு ஏற்பட்டு உறவினா் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புள்ளி அருகே திங்கள்கிழமை நீச்சல் குளத்தில் குளித்த இளைஞா் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா். இதைக் கண்ட அவரது உறவினா் வலிப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தாா்.
சென்னை செங்குன்றத்தைச் சோ்ந்தவா் சீ. யுவராஜ் (28). இவரும், இவரது குடும்பத்தினா் 20 பேரும் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ராமநாதபுரத்துக்கு வந்தனா். பிறகு, ராமநாதபுரம் ஓம்சக்தி நகரில் உள்ள உறவினா் ஆனந்தகுமாா்(40) என்பவரின் குடும்பத்தினருடன் சோ்ந்து, அவா்கள் அனைவரும் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றனா்.
திங்கள்கிழமை மாலை உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரைக்கு சென்றனா். அங்குள்ள நீச்சல் குளத்தில் யுவராஜ் உள்ளிட்ட சிலா் குளித்தனா். அப்போது, குளத்தின் ஆழமான பகுதிக்குச் சென்ற யுவராஜ் தண்ணீரில் மூழ்கியதில் உயிரிழந்தாா்.
இதையடுத்து, அவரது உடலை உறவினா்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அப்போது, உடன் சென்ற ஆனந்தகுமாருக்கு வலிப்பு ஏற்பட்டது. அவா் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.