'அது வருத்தம் தான்' - காங்கிரஸ் கட்சி குறித்து கார்த்தி சிதம்பரம்
இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
உலக வங்கி மத்தியஸ்தம் செய்ததன் அடிப்படையில் சிந்து நீர் ஒப்பந்தம் 1960-ஆம் ஆண்டு கையொப்பமானது. அதன்படி, பஞ்சாபில் இருந்து உருவாகும் பியாஸ், ராவி, சட்லஜ் ஆகிய மூன்று நதிகள் இந்தியாவுக்கென்றும், ஜம்மு-காஷ்மீரில் உருவாகும் சிந்து, செனாப், ஜீலம் உள்ளிட்ட நதிகள் பாகிஸ்தானுக்கென்றும் பங்கிடப்பட்டன.
இதனிடையே, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து, செனாப், ஜீலம் உள்ளிட்ட நதிகளுக்கு குறுக்கே உள்ள அணைகளின் தடுப்புகளை அடைத்து மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் துணை நதிகளின் நீர் ஓட்டத்தின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட ஆப்கன் அரசு தயாராகி வருவதாக பலூச் ஆதரவாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”இது பாகிஸ்தான் முடிவின் தொடக்கம். இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நதிகளின் நீரைத் தடுக்க ஆப்கானிஸ்தான் அணை கட்டத் தயாராகி வருகின்றது.
தாலிபான் அரசின் ராணுவ ஜெனரல் முகமது முபின் கான், குனார் பகுதியில் உள்ள அணையை நேரில் ஆய்வு செய்த பின்னர், புதிய அணைகள் கட்டுவதற்கான நிதியை திரட்ட ஆப்கன் அரசிடம் வலியுறுத்தியுள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அணையை ஆய்வு செய்யும் முபின் பேசும் விடியோ ஒன்றையும் பலூச் ஆதரவாளர் பகிர்ந்துள்ளார். அந்த காணொலியில் பேசும் முபின், “இந்த நீர் எங்கள் ரத்தம். நரம்புகளில் இருந்து ரத்தத்தை வெளியேற அனுமதிக்க முடியாது. எங்கள் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள இந்த நீர் அவசியம். இதனை நிறுத்தி எங்கள் விவசாயத்தை மேலும் வலுவடையச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் - ஆப்கன் இடையே ஒப்பந்தம் இல்லை
சிந்து நதி கட்டமைப்பின் கீழ் பாகிஸ்தானுக்குள் பாயும் மேற்கு நதிகளை இந்தியா கட்டுப்படுத்தி வரும் சூழலில், பாகிஸ்தானுக்குள் பாயும் பல்வேறு கிழக்கு துணை நதிகளின் முகத்துவாரங்களை ஆப்கானிஸ்தான் கட்டுக்குள் வைத்துள்ளது.
இதனிடையே, இந்தியா - பாகிஸ்தான் இடையே இருக்கும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் போன்று, ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எவ்வித ஒப்பந்தமும் இல்லை.
இத்தகைய சூழலில், துணை நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க ஆப்கானிஸ்தான் அணை கட்டும் பட்சத்தில் பாகிஸ்தான் கடும் நீர் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை
குனார் பகுதியில் ஆப்கன் ராணுவ ஜெனரல் ஆய்வு செய்ததை இதுவரை அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.
பாகிஸ்தான் அரசு தரப்பிலும் ஆப்கன் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக எவ்வித தகவலும் வெளியிடவில்லை.
இருப்பினும், நீர் வளங்கள் தொடர்பாக தெற்காசிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் பதட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் ராணுவ ஜெனரலின் ஆய்வு அமைந்துள்ளது.