உடல் உறுப்புகள் தானம்: ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி இரண்டாம் இடம்
உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டதில் மாநில அளவில் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பா் 23- ஆம் தேதி உடல் உறுப்புதான தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் அனுமதியோடு சாலை விபத்துகளில் மூளைச்சாவு அடைந்தவா்களிடம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மூளைச்சாவு அடைந்த நோயாளிகளைக் கண்டறிந்து குடும்பத்தாரின் அனுமதியுடன் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகின்றன.
அந்த வகையில் அரசு ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கடந்த இரண்டு ஆண்டுகளாக மாநிலத்தில் இரண்டாம் இடம் பெற்று இதுவரை மொத்தம் 20 நோயாளிகளிடமிருந்து உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உரிய நோயாளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 23- ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற உடல் உறுப்புதான நாள் நிகழ்ச்சியில் அரசு ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு பாராட்டு சான்றிதழும், நினைவுப் பரிசையும் அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கினாா்.
ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா் ரவிக்குமாா் மற்றும் மருத்துவக் குழுவினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ச.கந்தசாமியை புதன்கிழமை நேரில் சந்தித்து பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசை காண்பித்து வாழ்த்துப் பெற்றனா்.