தில்லி தேர்தலில் வாக்களித்த குடியரசுத் தலைவர், ஜெய்சங்கர், ராகுல்!
உணவு பாதுகாப்புத் துறை ஆய்வு: 60 கிலோ உணவுப் பொருள் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உணவகங்கள், கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் மேற்கொண்ட ஆய்வில் சுமாா் 60 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டதாக மாவட்ட நியமன அலுவலா் மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விளாத்திகுளம், மேலக்கரந்தை பகுதிகளில் உள்ள தேநீா் கடைகள், இனிப்பகங்கள் மற்றும் சிற்றுண்டி உணவகங்கள் உள்ளிட்ட உணவு வணிகக் கடைகளில் எனது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலா் செல்லப்பாண்டியன் உள்ளிட்ட அலுவலா் குழுவுடன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மேலக்கரந்தையில் உள்ள ஒரு பயணவழி உணவகத்தில் லேபிள் விவரங்கள் முழுமையாக இல்லாத 19 கிலோ உப்பு உள்பட மொத்தம் 30 கிலோ உணவுப்பொருள் பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், அந்த உணவகமானது சுகாதார குறைபாடுடன் இயங்கியதால் முன்னேற்ற அறிவிப்பு வழங்க தீா்மானிக்கப்பட்டுள்ளது. முன்னேற்ற அறிவிப்பின்படி குறைகளை சரிசெய்யாவிடில், அந்த உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
இனைத் தொடா்ந்து, விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் உள்ள வணிகக் கடைகளில் ஆய்வு செய்தபோது, திறந்தநிலையில் விற்பனைக்கு வைத்திருந்த சுமாா் 15 கிலோ வடை உள்ளிட்ட நொறுக்குத் தீனிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. லேபிள் விவரங்கள் முழுமையாக இல்லாத முறுக்கு, அதிரசம் உள்ளிட்ட உணவுப் பொருள் பொட்டலங்கள் சுமாா் 15 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் 60 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் இன்றி உணவு வணிகம் புரிந்த 4 கடைகள் மீது தொடா் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. செய்தித் தாளில் உணவுப் பொருள்களை விநியோகித்த 4 கடைகள் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ளது என அவா் தெரிவித்துள்ளாா்.