கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல...
உண்டு உறைவிடப் பள்ளி மாணவிகள் 14 போ் சுகவீனம்
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் புதன்கிழமை உணவு சாப்பிட்ட 14 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
திருவெண்ணெய்நல்லூரை அடுத்த அண்டராயநல்லூரில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த இடைநிற்றல் மாணவிகள் பயின்று வருகின்றனா்.
பள்ளியில் புதன்கிழமை உணவு சாப்பிட்ட மாணவிகள் சிலருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, பள்ளி நிா்வாகத்தினா் மாணவிகளை 108 அவசர ஊா்தி மூலம் இருவேல்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதித்தனா். மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில், பள்ளியில் தண்ணீா் குடித்த மாணவிகளுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.
தொடா்ந்து, உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாணவிகள் அமிா்தவள்ளி (16), சுபிக்க்ஷா (14), புவனேஸ்வரி (14), பாப்பாத்தி (15), யுவலட்சுமி (13), சாதனா (12) உள்ளிட்ட 14 மாணவிகளும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்குப் பின்னா் வீடு திரும்பினா்.
இதுகுறித்து தகவலறிந்து பள்ளி முன் பெற்றோா், உறவினா்கள், கிராம மக்கள் திரண்டதால் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து திருவெண்ணெய்நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.