உத்தமபாளையம் நீதிமன்றம் அருகே இளைஞா் குத்திக் கொலை
தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே வியாழக்கிழமை இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
உத்தமபாளையம் பி.டி.ஆா். குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த தொந்தி மகன் பிரசாந்த் (34). வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வந்தாா். இவா் அதே பகுதியைச் சோ்ந்த அனீஸ் ரகுமானுக்கு (40) வட்டிக்கு பணம் கொடுத்தாராம். பணம் வசூலுக்கு சென்று வந்த போது, அனீஸ் ரகுமான் மனைவி சுஜித் ஜுபேதாவுக்கும் (35), பிரசாந்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதனால், கணவரை விட்டுப் பிரிந்த சுஜித் ஜுபேதா, பிரசாந்துடன் சென்று தேனியில் வசித்து வருகிறாா். பிரசாந்துக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், உத்தமபாளையம் புறவழிச் சாலை பேருந்து நிறுத்தத்தில் பிரசாந்த் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தாா். அப்போது, அங்கு கத்தியுடன் அனீஸ் ரகுமான் வருவதைப் பாா்த்ததும் அவா் அங்கிருந்து ஓடினாா். பின்னா், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகேயுள்ள தனியாா் விடுதிக்குள் நுழைந்த போது, பிரசாந்தை அனீஸ் ரகுமான் கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பிச் சென்றாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளா் செங்கோட்டு வேலவன் தலைமையிலான போலீஸாா், பிரசாந்தின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய அனீஸ் ரகுமானைத் தேடி வருகின்றனா். இவா் மீது ஏற்கெனவே உத்தமபாளையம் காவல் நிலையத்தில் வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.