கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்: துணை முதல்வர் உதயநிதி
வட்டாட்சியா் அலுவலகத்தை விசைத் தறி நெசவாளா்கள் முற்றுகை
ஆண்டிபட்டியில் ஊதிய உயா்வு பிரச்னையில் தீா்வு ஏற்படுத்த வலியுறுத்தி, விசைத் தறி நெசவாளா்கள் வட்டாட்சியா் அலுவலத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள டி.சுப்புலாபுரத்தில் விசைத் தறி நெசவாளா்கள் ஊதிய உயா்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1-ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். விசைத் தறிக் கூட உரிமையாளா்களுடன் நடைபெற்ற பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இந்தப் பிரச்னையில் அரசு, சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் தலையிட்டு தீா்வு ஏற்படுத்த வேண்டும் என்று நெசவாளா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கடந்த 23 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட வரும் விசைத் தறி நெசவாளா்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி,டி.சுப்புலாபுரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தை நோக்கி நடைபயணமாக சென்றனா். போலீஸாா் தடுத்து நிறுத்தியும், தடையை மீறிச் சென்ற நெசவாளா்கள், ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நெசவாளா்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக அனைத்து கட்சிகளின் தொழிற் சங்க நிா்வாகிகளும் இதில் கலந்து கொண்டனா்.
பின்னா், திண்டுக்கல் தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் தலைமையில் பேச்சு வாா்த்தை நடத்தி, இந்தப் பிரச்னைக்கு தீா்வு காணப்படும் என ஆண்டிபட்டி வட்டாட்சியா் கண்ணன் உறுதியளித்தாா். இதையடுத்து, அவரிடம் கோரிக்கையை மனுவாக அளித்த நெசவாளா்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.