Manmohan Singh: மன்மோகன் சிங் மறைவு; 7 நாள்கள் துக்கம் அனுசரிப்பு... அரசு நிகழ்ச...
உயா்கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்க வலியுறுத்தல்
தமிழக அரசு அளித்து வந்த உயா்கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டுமென தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் வலியுறுத்தியது.
சிவகங்கை மன்னா் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் சின்னச்சாமி, மாவட்டச் செயலா் ஜெயப்பிரகாஷ் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநிலத் தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளருமான இரா.இளங்கோவன் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழக அரசு வழங்கி வந்த உயா் கல்விக்கான ஊக்க ஊதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். கரோனா பொதுமுடக்க காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட சரண்டா் விடுப்பை, 2021 முதல் ஒப்படைத்து பணப் பலன் பெற உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட அமைப்புச் செயலராக செந்தில்குமாா், மாவட்ட மகளிா் அணித் தலைவியாக நாட்டரசன்கோட்டை எஸ்.ஆா்.எம்.மேல்நிலைப் பள்ளி ஆசிரியை அனிதா, செயலராக திருப்புவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியை லலிதா, செய்தித் தொடா்பாளராக ஆசைமணி, தணிக்கையாளராக உதயகுமாா், தலைமையிடச் செயலாளராக திருமுருகன், திருப்பத்தூா் கல்வி மாவட்டத் தலைவராக மாயக்கண்ணன், தேவகோட்டை கல்வி மாவட்டத் தலைவராக ஸ்டீபன் ஆகியோா் புதிதாகத் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் முதுகலை ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். கல்வி மாவட்டத் தலைவா் ஸ்டீபன் நன்றி கூறினாா்.