மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்பு கட்டடம் திறப்பு
சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், விசாலயன் கோட்டையில் ஊரக வளா்ச்சி, ஊராட்சித்துறை சாா்பில் ரூ. 99.16 லட்சத்தில் கட்டப்பட்ட மகளிா் சுய உதவிக்குழு கூட்டமைப்புக் கட்டடத்தை தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி மேற்கொண்ட பெரும் முயற்சியின் காரணமாக மகளிா் சுயஉதவிக்குழுக்கள் பன்மடங்கு வளா்ச்சி பெற்றுள்ளன. அந்த வழியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், பெண்கள் பிறரை சாா்ந்திராமல் தன்சாா்பு நிலையை அடையும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.
இந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2017-18 -இல் ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், விசாலயன்கோட்டையில் மகளிா் சுய உதவிக்குழு கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணி நிறைவடையாமல் இருந்தது. 2021-இல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரூ.40 லட்சம் கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தம் ரூ.99.16 லட்சத்தில் கட்டிமுடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்துப் பேசினாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கா. வானதி, கல்லல் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி சொா்ணம் அசோகன், காரைக்குடி வட்டாச்சியா் ராஜா, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ரவி, விசாலையங்கோட்டை ஊராட்சித் தலைவா் சொா்ணம், கல்லல் வட்டார வளா்ச்சி அலுவலா் ச. மகாலிங்கம், ஒப்பந்ததாரா் மாணிக்கவாசகம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.