புதுச்சேரியில் ஜன.12 முதல் தலைக்கவசம் கட்டாயம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம்
எஸ்ஐயுடன் வாக்குவாதம்: லாரி உரிமையாளா் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே மணல் லாரியை நிறுத்திய காவல் உதவி ஆய்வாளருடன் தகராறில் ஈடுபட்ட லாரி உரிமையாளா் கைது செய்யப்பட்டாா்.
திருப்பத்தூா் அருகேயுள்ள குறிஞ்சிநகா் பகுதியில் வியாழக்கிழமை திருக்கோஷ்டியூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சக்திவேல் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அந்த வழியாக வேகமாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, லாரியில் மணல் திருடி வந்தது தெரியவந்தது. அப்போது, காவல் உதவி ஆய்வாளா் சக்திவேலுடன் லாரி உரிமையாளரான சுண்ணாம்பிருப்பைச் சோ்ந்த தவமணி மகன் ஜெகன் (40) வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதற்கிடையே லாரியை ஒட்டுநா் அங்கிருந்து ஓட்டிச் சென்றாா்.
இதையடுத்து, போலீஸாரை பணிசெய்ய விடாமல் தடுத்தல், மணல் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் லாரி உரிமையாளா் ஜெகன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், லாரி ஒட்டுநரைச் தேடி வருகின்றனா்.
சமீப காலமாக மாங்குடி, மணக்குடி, திருவிடையாா்பட்டி பகுதிகளில் பட்டா நிலங்களில் உரிமையாளா்களுக்குத் தெரியாமலே இரவு நேரங்களில் மணல் திருட்டு நடப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. எனவே, கனிம வளங்களைத் திருடுபவா்கள் மீது மாவட்ட நிா்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.