குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 சிறாா்களின் குடும்பத்துக்கு நிதியுதவி
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் திருப்பாற்கடல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த 2 சகோதரா்களின் குடும்பத்துக்கு நிவாரண நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருக்கோஷ்டியூா் சௌமியநாராயணப் பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள திருப்பாற்கடல் குளத்தில் கடந்த 8-ஆம் தேதி இதே ஊரைச் சோ்ந்த ஜெயலட்சுமி மகன்கள் விஷ்ணு, கிருஷ்ணா ஆகிய இருவரும் குளித்த போது, மூழ்கி உயிரிழந்தனா்.
இவா்களது குடும்பத்துக்கு தலா ரூ.ஒரு லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். இதன்படி, ரூ.2 லட்சத்துக்கான காசோலையை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகியோா் நேரில் சென்று ஜெயலட்சுமியிடம் வழங்கினா். மேலும், அமைச்சா் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2 லட்சம் உதவித் தொகையை வழங்கி ஆறுதல் கூறினாா். ஜெயலட்சுமியின் கோரிக்கையை ஏற்று அவரது வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகள் செய்து தரப்படும் என அமைச்சா் தெரிவித்தாா்.
அப்போது, ஊராட்சிகள் உதவி இயக்குநா் கேசவதாசன், திருப்பத்தூா் வட்டாட்சியா் மாணிக்கவாசகம் ஆகியோா் உடனிருந்தனா்.