`நாம் சினிமாவைக் கொண்டாடுவோம்'- பிரதீப்பின் பழைய ட்வீட்டுக்கு`டியூட்' தயாரிப்பு ...
உயிரிழந்த பெண் டாக்டர்; SI செய்த வன்கொடுமை; காதலனின் பகீர் வாக்குமூலம்
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா அருகில் உள்ள பால்டன் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த 28 வயது பெண் டாக்டர் தன்னை சப் இன்ஸ்பெக்டர் கோபால் என்பவர் 4 முறை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெண் டாக்டர் தனது உள்ளங்கையிலும் இது தொடர்பாக எழுதி வைத்திருந்தார். சப் இன்ஸ்பெக்டர் மட்டுமல்லாது டாக்டர் தங்கியிருந்த வீட்டு உரிமையாளர் மகன் பிரசாந்த்தும் தனது தற்கொலைக்குக் காரணம் என்று குறிப்பிட்டிருந்தார். பெண் டாக்டரின் தற்கொலையைத் தொடர்ந்து கோபால் மற்றும் பிரசாந்த் ஆகிய இரண்டு பேருமே தலைமறைவாக இருந்தனர்.
ஆனால் இப்போது இருவரும் போலீஸில் சரணடைந்துள்ளனர். அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருப்பதாக காவல்துறை தரப்பில் சொல்கிறார்கள். இதுகுறித்து பிரசாந்த் சகோதரர் அளித்த பேட்டியில், ''நாங்கள்தான் எங்களது சகோதரனிடம் சரணடையும்படி கேட்டுக்கொண்டோம்.

இருவரும் பகிர்ந்து கொண்ட சோசியல் மீடியா சாட்டிங் விபரம், போன் கால் விபரங்களையும் போலீஸில் கொடுத்திருக்கிறோம். பெண் டாக்டர் எனது சகோதரனிடம் தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி கேட்டார்.
ஆனால் என் சகோதரன் திருமணம் செய்துகொள்ள மறுத்தார். அதன் பிறகு பெண் டாக்டர் தொடர்ந்து சித்ரவதை செய்ய ஆரம்பித்தார். பெண் டாக்டர்தான் அடிக்கடி எனது சகோதரனை போனில் தொடர்புகொண்டு பேசுவார்''என்றார். இது குறித்து பிரசாந்த் சகோதரி கூறுகையில்,'' எனது சகோதரனுக்கு கடந்த மாதம் டெங்கு காய்ச்சல் வந்தது. இதனால் அவனுக்கு பெண் டாக்டர் சிகிச்சையளித்தார். அப்போது இருவரும் போன் நம்பரை பகிர்ந்துகொண்டனர். அடுத்த இரண்டு வாரத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பெண் டாக்டர் கேட்டுக்கொண்டார். ஆனால் எனது சகோதரன் அதனை நிராகரித்துவிட்டார்.
தீபாவளி நேரத்தில் பெண் டாக்டர் பதற்றமாக இருந்தார். பணி காரணமாக அவர் பதற்றமாக இருப்பதாக நினைத்துக்கொண்டோம். அவரை எங்களது குடும்பத்தில் ஒருவராகத்தான் நினைத்தோம்''என்றார்.
கைது செய்யப்பட்ட பிரசாந்த் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், பெண் டாக்டர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நிர்ப்பந்தம் செய்தார் என்றும், தொடர்ந்து பாலியல் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்ததாகவும் தெரிவித்திருக்கிறார். இருவரும் சாட் செய்த விபரங்களை எடுத்து போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். பிரசாந்த்தை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
அரசியல்வாதிகள் மற்றும் போலீஸார் போலி பிரேத பரிசோதனை அறிக்கை, உடல் தகுதி அறிக்கைகளை கொடுக்கும்படி நிர்ப்பந்தம் செய்ததாகவும் பெண் டாக்டர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பெண் டாக்டர் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன் காதலன் பிரசாந்திற்கு போன் செய்து பேசியிருக்கிறார். அவர்கள் பேசிக்கொண்டதில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டு தற்கொலை செய்தாரா என்பது குறித்து பிரசாந்திடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிரசாந்த் சாப்ட்வேர் எஞ்ஜினீயராக இருக்கிறார்.

பெண் டாக்டரை பல முறை பாலியல் வன்கொடுமை செய்த சப் இன்ஸ்பெக்டர் கோபாலும் தானாகவே வந்து பால்டர் ரூரல் போலீஸில் சரணடைந்தார். தற்கொலை செய்த பெண் டாக்டரின் உடல் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. பெண் டாக்டரின் தற்கொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


















