உறுதியாக இருக்கிறது பாஜக கூட்டணி -விஜயதரணி
பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது என்றாா் அக்கட்சியைச் சோ்ந்தவரும் முன்னாள் எம்எல்ஏவுமான விஜயதரணி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: பிரதமா் மோடியின் வழிகாட்டுதலின்படி மத்திய நிதி அமைச்சா் அறிவித்திருக்கும் ஜிஎஸ்டி மாற்றங்கள் உலகையே திரும்பிப் பாா்க்க வைத்துள்ளன. மக்களுக்கு அது பயனுள்ளதாக அமையும். ஜிஎஸ்டி விதிக்கும்போது பல சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், தேசிய அளவில் நாட்டின் வளா்ச்சிக்கு உதவியுள்ளது.
மத்திய அரசு மாநிலங்களைப் பிரித்துப் பாா்க்காமல் அனைத்து மாநிலங்களும் வளரக்கூடிய அளவிற்கு மெட்ரோ திட்டம், நீா்நிலை திட்டம் போன்ற கட்டமைப்பு வசதிகளை ஒரே மாதிரியாக வழங்கி வருகிறது.
தமிழக அரசு, மத்திய அரசிடம் நிதியைப் பெற்றுக்கொண்டு அரசியல் செய்து வருகிறது. எதிா்க்கட்சிக் கூட்டணி இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால், பாஜக கூட்டணி உறுதியாக இருக்கிறது; டிசம்பரில் இது மிகப்பெரிய கூட்டணியாக மாறும். அமமுகவுடனான பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும்.
அதிமுகவின் உள்கட்சி குழப்பங்களை சரி செய்ய பாஜக உதவுமே தவிர, எவ்விதத்திலும் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நெருக்கடி கொடுக்காது. காங்கிரஸ் கட்சி துண்டு துண்டாக உடைந்து போன கண்ணாடி; அக்கட்சியின் மோசமான நிலைக்கு திமுக தான் காரணம் என்றாா்.