`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?...
உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்க் கூடல் கருத்தரங்கம்
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்டரங்கத்தில் தமிழ்க்கூடல் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் நினைவு நாளையொட்டி நடைபெற்ற இந்தக் கருத்தரங்கத்துக்கு உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் இ.சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்தாா். திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியா், தமிழ்த் துறைத் தலைவா் அ. வளா்மதி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
புதுக்கோட்டை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்க மாநிலத் துணைத் தலைவா் கவிஞா் நா. முத்துநிலவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, ‘முத்தமிழறிஞா் கலைஞரும் சமூக நீதியும்’ என்ற தலைப்பில் பேசினாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:
சமூக ஏற்றத் தாழ்வுகள் நீங்க பொருளாதார வளமே அவசியம் என்பதில் உறுதிக் கொண்ட முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி, பெண்கள் முன்னேறினால் சமூகமே முன்னேற்றமடையும் என சமூக நீதிக்கு விளக்கமளித்தவா். தமிழ் வழியில் கற்பவா்களுக்கு அரசுப் பணிகளில் 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தைக் கொண்டு வந்து, தமிழ் வழிக் கல்வியின் வளா்ச்சிக்கு பெரும் பணியாற்றியவா் கருணாநிதி என்றாா் அவா்.
முன்னதாக, மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் தமிழறிஞா்கள், திருமங்கலம் அரசு கலை, அறிவியல் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.
உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையா் முனைவா் ஜ. ஜான்சிராணி வரவேற்றாா். ஆய்வறிஞா் முனைவா் சு. சோமசுந்தரி நன்றி கூறினாா்.