எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்: மாநில உரிமைகள் பறிபோகாது -மத்...
உலகளவில் 56 மனித சிறுநீரகங்களை விற்ற உக்ரேனிய பெண் போலந்தில் கைது!
சட்டவிரோதமாக 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று அதனை விற்பனை செய்து கசகஸ்தானில் சிறைத் தண்டனை பெற்ற உக்ரேனிய பெண் போலந்து நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச அளவில் மனித உறுப்புகளைக் கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர் உக்ரேன் நாட்டைச் சேர்ந்த க்செனியா பி. என்று குறிப்பிடப்படும் 35 வயதான பெண். இவர், கடந்த 2017 முதல் 2019 வரையிலான காலத்தில் சட்டவிரோதமான முறையில் 56 மனித சிறுநீரகங்களைப் பெற்று கள்ளச்சந்தையில் விற்பனை செய்ததற்காக அவருக்கு கசகஸ்தான் நாட்டில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, தலைமறைவான அவரை கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் இண்டர்போல் அமைப்பு தேடி வந்த நிலையில் அவரை பிடிக்க சிவப்பு அறிவிப்பு வெளியிட்டு சர்வதேச நாடுகளின் உதவியை நாடியிருந்தது.
இதையும் படிக்க:அதீத உணவு சாப்பிடும் விடியோக்கள் மூலம் பிரபலமானவர் உடல் பருமனால் மரணம்!
இந்நிலையில், உக்ரைன் நாட்டுடனான எல்லையில் போலந்து நாட்டு பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று (மார்ச்.11) தெரிவித்துள்ளனர். ஆனால், கசகஸ்தான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்க வேண்டிய அவர் போலந்து நாட்டில் இருந்து கைது செய்யப்பட்டதற்கான காரணம் குறித்த தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
மேலும், போலாந்து அதிகாரிகள் அவரை ஒருவார காலம் காவலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அவர் கசகஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவார் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, அவர் கசகஸ்தான், அர்மேனியா, அஜர்பைஜான், உக்ரைன், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் தாய்லாந்து போன்ற நாட்டு மக்களின் பணத்தேவையை அறிந்து அவர்களிடமிருந்து சட்டவிரோதமான முறையில் சிறுநீரகத்தை பெற்று அதனை கள்ளச்சந்தையில் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.