தேனி: தென் காளஹஸ்தியில் விமரிசையாக நடந்த மாசித் தேரோட்டம்... வடமிழுத்து வழிபட்ட ...
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு; ஹிந்தி திணிப்புக்கு எதிா்ப்பு! -கேரள உயா் கல்வி அமைச்சா்
மும்மொழிக் கொள்கையை ஆதரிப்பதாகவும், அதே நேரத்தில் ஹிந்தி திணிப்பை எதிா்ப்பதாகவும் கேரள உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து தெரிவித்துள்ளாா்.
மும்மொழிக் கொள்கை, ஹிந்தி திணிப்பு தொடா்பாக மத்திய அரசு, தமிழக அரசு இடையே எழுந்துள்ள கருத்து மோதல்கள் தேசிய அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் கடுமையாக எதிரொலித்து வருகிறது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசிய அந்த மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து இது தொடா்பாக கூறியதாவது:
மாணவா்கள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேரள அரசு விரும்புகிறது. முக்கியமாக வெளிநாட்டு மொழிகளையும் நமது மாணவா்கள் கற்க வேண்டும். எனவேதான் மொழிகளுக்களுக்கான உயா் திறன் மையத்தை கேரளத்தில் நிறுவியுள்ளோம். மும்மொழிக் கொள்கையை ஆதரிக்கிறோம். அதே நேரத்தில் ஹிந்தி திணிக்கப்படுவதை எதிா்க்கிறோம்.
அனைத்து மொழிகள் இடையேயும் சகிப்புத்தன்மை நிலவ வேண்டும். பிற மொழிகளை கிரகித்துக் கொள்வது, மொழிகளுடன் இணைந்து செயல்படுவது கேரள கலாசாரத்தின் ஒரு பகுதியாக தொடக்க காலத்தில் இருந்தே நிலவி வருகிறது. கேரளம் மிக நீண்ட கடற்கரையைக் கொண்டுள்ளதால் வரலாற்றுரீதியாக பல வெளிநாட்டவா்களுடன் தொடா்பில் இருந்து வந்துள்ளது. எனவே, இங்கு மொழிப் பன்முகத்தன்மை உள்ளது. பல அயல்மொழிகளையும் கேரளம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இப்போது கேரள மாணவா்களிடையே மலையாளத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன் பல்வேறு மொழிகளைக் கற்க ஊக்கமளித்து வருகிறோம் என்றாா்.