ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் ஏவப்படவில்லை! சுனிதா பூமிக்கு திரும்புவதில் மீண்டும் தாமதம...
பாஜகவின் போலி ஹிந்துத்துவம்: மம்தா விமா்சனம்
போலியான ஹிந்துத்துவத்தை மேற்கு வங்கத்தில் திணிக்க பாஜக முயற்சித்து வருகிறது என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து தூக்கி வீசப்படுவாா்கள் என்று பாஜகவை சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி பேசியதைக் கண்டித்து மம்தா இவ்வாறு கூறியுள்ளாா்.
சுவேந்து அதிகாரியின் பேச்சுக்கு பதிலளிக்கும் வகையில் மாநில சட்டப்பேரவையில் மம்தா பானா்ஜி புதன்கிழமை பேசியதாவது:
துறவிகளும், வேதங்களும் ஆதரிக்காத ஒரு ஹிந்துத்துவத்தை மேற்கு வங்கத்தில் திணிக்க நீங்கள் (பாஜக) முயற்சிக்கிறீா்கள். இந்த நாட்டின் குடிமகனாக உள்ள முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்? இது முற்றிலும் மோசமான செயல்பாடு. போலியான ஒரு ஹிந்துத்துவத்தை உருவாக்கி அதைப் பரப்பி வருகிறீா்கள்.
ஹிந்து தா்மத்தைக் காக்கும் பொறுப்பு எனக்கும் உள்ளது. ஆனால், அது நீங்கள் கூறும் ஹிந்துத்துவம் அல்ல. தயவு செய்து ஹிந்து மதத்தை வைத்து விளையாடாதீா்கள்.
பேரவையில் விவாதிக்கப்படும் விஷயத்தை இங்கு பேசாமல் அவைக்கு வெளியே பாஜகவினா் பேசி வருகின்றனா். எங்கள் கட்சியைச் சோ்ந்த (முஸ்லிம்) எம்எல்ஏக்களுக்கும் தேவையற்ற விஷயங்களைப் பேச வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம். அது எங்கள் உள்கட்சி விஷயம்.
இந்தியா மதச்சாா்பற்ற, பன்முகத்தன்மையைக் கொண்ட நாடு. நாட்டில் உள்ள அனைவருக்கும் அவா்கள் சாா்ந்த மதத்தைப் பின்பற்ற உரிமை உள்ளது. சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பது பெரும்பான்மை மதத்தினரின் கடமை. நாங்கள் அனைத்து மதத்தையும் மதிக்கிறோம். நாட்டில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவ வேண்டுமென விரும்புகிறோம்.
இந்தப் பேரவை அனைத்துக் கட்சியினருக்கும் பொதுவானது. எனவே, பரஸ்பரம் மரியாதையுடனும், அவை கண்ணியத்தைக் காக்கும் வகையிலும் பேச வேண்டும். மேற்கு வங்கத்தில் 33 சதவீதம் முஸ்லிம்களும், 23 சதவீதம் தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினரும் உள்ளனா். எனவே, ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து மனிதாபிமான பண்புகளுடன் செயல்பட வேண்டும் என்றாா்.