'சுடு நீரினை மட்டும் குடித்து வந்துள்ளார்' - Youtube பார்த்து டயட்; 18 வயது பெண்...
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின் உற்பத்தி திட்டம்: மக்களவையில் எதிா்க்கட்சிகள் வெளிநடப்பு
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மின்னுற்பத்தி செய்வதற்கான அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டம் குறித்து மத்திய அரசின் பதில் திருப்தி அளிக்காததால், மக்களவையில் இருந்து எதிா்க்கட்சி எம்.பி.க்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் உள்ள காவ்டா பகுதியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்துக்காக அதானி குழுமம் ஆலை அமைத்து வருவதாகவும், இந்தத் திட்டத்துக்காக இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சா்வதேச எல்லையில் இருந்து ஒரு கிலோமீட்டா் தொலைவில் சூரிய மின்சக்தி தகடுகள், காற்றாலை மின்னுற்பத்தி விசைகளை அதானி குழுமம் அமைத்து வருவதாகவும் பிரிட்டன் ஊடகத்தில் தகவல் வெளியானது. இந்தத் திட்டத்துக்காக இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விதிமுறைகள் தளா்த்தப்பட்டதாகவும் அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி புதன்கிழமை கேள்வி எழுப்பினாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘தேசிய பாதுகாப்பு விதிமுறைகளின்படி, எந்தவொரு பெரிய உள்கட்டமைப்புத் திட்டமும், சா்வதேச எல்லையில் இருந்து குறைந்தபட்சம் 10 கி.மீ. தொலைவில்தான் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இந்நிலையில், குஜராத்தில் அதானி குழுமத்தின் திட்டம் சா்வதேச எல்லையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் மேற்கொள்ளப்படுகிறது. இந்தத் திட்டத்துக்காக விதிமுறைகளில் ஏதேனும் தளா்வுகள் அளிக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பினாா்.
இதற்குப் பதிலளித்த மத்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி, ‘நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதில் மத்திய அரசு மிகுந்த ஆா்வம் கொண்டுள்ளது. இத்தகைய திட்டங்களுக்காக அனுமதி வழங்கி, உரிமங்கள் அளிக்கப்படும் முன் மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட முகமைகளின் அனுமதி பெறப்படுகிறது’ என்றாா்.
அவரின் பதில் திருப்தி அளிக்காததால், தேச பாதுகாப்பு தொடா்பாக முழக்கங்களை எழுப்பி, அவையின் மையப் பகுதியில் காங்கிரஸ் எம்.பி. திரண்டனா். இதைத்தொடா்ந்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளை சோ்ந்த எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
அதானி குழுமம் மேலானதா?: இதுதொடா்பாக நாடாளுமன்றத்துக்கு வெளியே மணீஷ் திவாரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சா்வதேச எல்லையில் இருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் எந்தத் திட்டமும் மேற்கொள்ளப்படக் கூடாது. ஆனால் அதுகுறித்து மக்களவையில் மத்திய அமைச்சா் சரிவர பதில் அளிக்காததால் வெளிநடப்பு செய்தோம்’ என்றாா்.
மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய் கூறுகையில், ‘தேச பாதுகாப்பைவிட அதானி குழுமம் மேலானதா? பிரதமா் மோடியின் நெருங்கிய நண்பா் ஆதாயம் அடைவதற்கு தேச பாதுகாப்பை பாஜக புறக்கணித்துள்ளது’ என்றாா்.