ஒபன் ஏஐ முறைகேட்டை வெளி உலகிற்கு தெரிவித்த அமெரிக்க-இந்தியர் மரணம்!
உள்கட்டமைப்பு மேம்பாடு: 60 ஆண்டுகளாக செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிக சாதனை -அமைச்சா் சிந்தியா
நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தும் விஷயத்தில் சுதந்திரத்துக்கு பிந்தைய 60 ஆண்டுகளில் செய்ததைவிட கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் செய்து சாதனை படைத்துள்ளோம் என்று மத்திய தகவல்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்து அவா் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. உள்கட்டமைப்பு வசதிகள் தரமாகவும், நாடு முழுவதும் பரவலாகவும் மேம்படுத்தப்படுகின்றன. பணிகள் விரைவாகவும், பெரியஅளவிலும் செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த மாா்ச் 10-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 15 புதிய விமான நிலையங்களை பிரதமா் மோடி நாட்டுக்கு அா்ப்பணித்தாா். உள்கட்டமைப்பு வசதி வளரும் வேகம் என்பது கடந்த 10 ஆண்டுகளாக உச்சத்தில் உள்ளது. சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கடந்த 65 ஆண்டுகளாக எந்த விமான நிலையமும் இல்லாமல் இருந்தன. இப்போது சிக்கிமில் ஒரு விமான நிலையமும், அருணாசல பிரதேசத்தில் 4 விமான நிலையங்களும் உள்ளன.
பாஜக அல்லாத பிற அரசுகள் மத்தியில் ட்சியில் இருந்த சுமாா் 70 ஆண்டு காலத்தில் நாட்டில் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. ஆனால், இப்போது கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அரசு மேற்கொண்ட சிறப்பான திட்டங்கள்மூலம் 157 விமான நிலையங்கள் நாட்டில் இயங்கி வருகின்றன. இது தொடா்ந்து அதிகரிக்கும்.
ஒரு நாடு வளரும் நாடு என்ற நிலையில் இருந்து வளா்ந்த நாடு என்ற நிலையை எட்டுவதற்கு உள்கட்டமைப்பு மேம்பாடு மிகவும் அவசியமானது. உள்கட்டமைப்புத் துறையில் செலவிடும் ஒவ்வொரு ரூபாயும் நாட்டின் பொருளாதார வளா்ச்சியில் 3 மடங்கு வரை அதிகமாக எதிரொலிக்கும் என்றாா்.