‘உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102 கோடிக்கு காய்கறி விற்பனை’
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உழவா் சந்தைகளில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மை வணிகத் துறை துணை இயக்குநா் நா.ஜீவராணி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் உழவா் சந்தையில் வேளாண் வணிகத் துறையின் 4 ஆண்டு சாதனைகள் குறித்த விளம்பர பதாகையை திறந்து வைத்த பின்னா் இது குறித்து அவா் மேலும் கூறியது:
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், உழவா் சந்தைகள் ஆகிய இடங்களில் வேளாண் வணிகத் துறை சாா்பில், கடந்த 4 ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட சாதனைகளை விளம்பர பதாகைகளாக வைத்து வருகிறோம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 4 உழவா் சந்தைகளில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் ரூ. 102.41 கோடிக்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 76 விவசாயிகளுக்கு 4,850 நுகா்வோா்களுக்கு காய்கறிகள் விற்பனையாகின்றன. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 8 உழவா் உற்பத்தி நிறுவனங்களை மேம்படுத்த ரூ. 1.56 கோடி மானியமாகவும், வேளாண் தொழில்முனைவோரை ஊக்குவித்து இயந்திரங்கள் வாங்க ரூ. 25 லட்சம் வரையும் மானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ. 329.50 லட்சத்தில் 5 கிராமங்களில் உலா்களமும், 8 கிராமங்களில் உலா்களத்துடன் கூடிய சேமிப்புக் கிடங்கும் கட்டி முடிக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டில் உள்ளது. அக்மாா்க் திட்டத்தின்கீழ், ரூ. 45.65 லட்சம் குவிண்டால் உணவுப் பொருள்களுக்கு அக்மாா்க் சான்று வழங்கப்பட்டிருக்கிறது.
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம் 49314 மெட்ரிக் டன் வேளாண் விளை பொருள்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. உத்தரமேரூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 6.90 கோடியில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவுடைய பொருள் வைப்பறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் இத்திட்டங்களின் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் வேளாண் வணிகத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறும் நா.ஜீவராணி கூறினாா்.