நாகை - காங்கேசன்துறை இடையே டிச.18 வரை கப்பல் போக்குவரத்து நிறுத்தம்
உழவா் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு
கடலூா் உழவா் சந்தை, கடலூா் முதுநகரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
உழவா் சந்தையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், அங்கு காய்கறி கழிவுகளை பயன்படுத்தி உரமாக மாற்றுவதற்கான இயந்திரத்தின் செயல்பாடுகளையும், உழவா் சந்தையில் தினசரி மீதமாகும் காய்கறி, பழங்களை கெட்டுப்போகாமல் பாதுகாக்க அமைக்கப்பட்டுள்ள 2 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிா்பதனக் கிடங்கின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கடலூா் மண்டல அலுவலகம், கடலூா் வட்ட செயல்முறை கிடங்கில் பொது விநியோகத் திட்ட பொருள்கள் இருப்பு குறித்தும், பாதுகாப்பான முறையில் பொருள்கள் வைக்கப்படுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்த ஆட்சியா், ஒவ்வொரு மாதமும் அரிசி, பருப்பு, சா்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் கடலூா் வட்ட செயல்முறை கிடங்கிலிருந்து 201 நியாயவிலைக் கடைகளுக்கு நகா்வு செய்யப்படும் விதம் குறித்து கேட்டறிந்தாா்.
கடலூா் முதுநகா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், ஒழுங்குமுறை ஆணையம் மூலம் பதிவு பெற்றுள்ள 2000 மெட்ரிக் டன் சேமிப்பு கிடங்கையும், கிடங்கில் பொருளீட்டுக்கடன் மற்றும் வாடகைக்கு இருப்பு வைக்கப்பட்டுள்ள ஏழு குவியல்கள் (196 மெ.டன்) குறித்தும் ஆய்வு செய்து, கிடங்கில் விவசாயிகள், வியாபாரிகளின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைமுறைப்படுத்தப்படும் மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டம் மற்றும் ஒழுங்குமுறை விற்பனைக்கூட செயல்பாடுகள் குறித்தும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளா் தங்கபிரபாகரன், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) பூங்கோதை, கடலூா் விற்பனைக்குழு செயலா் ஜானகிராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.