ஊட்டி: "நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் ஸ்டாலின்" - இபிஎஸ் தாக்கு
'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார்.
ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் நேற்று நண்பகல் குன்னூரில் உரை நிகழ்த்திய எடப்பாடி பழனிசாமி, அதனைத் தொடர்ந்து ஊட்டியிலும் உரை நிகழ்த்தினார்.

அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "அ.தி.மு.க- வைப் பிளக்க எல்லா வகையிலும் சதி செய்து வருகிறது தி.மு.க. ஆனால், உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தி.மு.க கூட்டணியில்தான் பிளவு ஏற்பட்டிருக்கிறது. ஆட்சியில் பங்கு வேண்டும் என இப்போதே காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தால் தி.மு.க கூட்டணியில் பெரிய அளவிலான விரிசல் ஏற்பட்டிருக்கிறது. ஒருநாளைக்கு ஒரு திட்டம் என்கிற அடிப்படையில் ஏகப்பட்ட திட்டங்களை அறிவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், எந்தத் திட்டமும் செயல்பாட்டில் இல்லை.
வீண் விளம்பரங்களுக்காகவே இதுபோன்ற திட்டங்களை அறிவித்து வருகிறார். மீண்டும் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தாலிக்கு தங்கம், இலவச வேட்டி, சேலை போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

அ.தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார்கள். ஊட்டி மெடிக்கல் காலேஜ் இதற்குச் சிறந்த உதாரணம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் பெற்ற பிள்ளைக்குப் பெயர் வைக்கும் வேலையைச் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்" என்றார்.