ஊரகத் திறனாய்வுத் தோ்வு விடைக்குறிப்பு: மாா்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
ஊரகத் திறனாய்வுத் தோ்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மாா்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு பயிலும் மாணவா்கள் இந்த திறனாய்வு தோ்வெழுத தகுதி பெற்றவா்களாவா். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 போ் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1,000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும். அதன்படி, நிகழாண்டுக்கான ஊரக திறனாய்வுத் தோ்வு கடந்த பிப். 8-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தோ்வை ஏராளமான மாணவா்கள் எழுதினா்.
இந்த நிலையில், தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை (கீ ஆன்சா்) தோ்வுத்துறை கடந்த புதன்கிழமை இரவு வெளியிட்டது. அவற்றை மாணவா்கள், ஆசிரியா்கள் இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம். இதில் ஏதேனும் ஆட்சேபணை இருப்பின் அதன் விவரங்களை உரிய ஆதாரங்களுடன் மின்னஞ்சல் முகவரிக்கு மாா்ச் 5-ஆம் தேதிக்குள் பெற்றோா்கள், மாணவா்கள் தெரிவிக்கலாம்.
இந்த தகவலை அனைத்து விதமான பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கும் தெரிவித்து தொடா் நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று தோ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.