எக்ஸ்-டிவிடெண்ட் முன்னிட்டு வேதாந்தா பங்குகள் 3% சரிவு!
மும்பை பங்குச் சந்தையில், அறிவிக்கப்பட்ட டிசம்பர் 24 அன்று, எக்ஸ்-டிவிடெண்டை முன்னிட்டு, வேதாந்தா பங்கின் விலை கிட்டத்தட்ட 3 சதவிகிதம் சரிந்து ரூ.460.45 ஆக உள்ளது. நேற்று இது ரூ.473.10 ஆக முடிவடைந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தில் இது ரூ.465.75 ரூபாயாக தொடங்கி வர்த்தகமானது.
இந்த நிலையில், டிசம்பர் 16 தேதியன்று பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில், இயக்குநர் குழுவானது, ரூ.1 முக மதிப்பில் உள்ள ஒவ்வொரு பங்குகளுக்கும், நான்காவது இடைக்கால ஈவுத்தொகையான ரூ.8.50 என ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தது.
முன்னதாக வேதாந்தா நிறுவனம், இந்த ஆண்டு ஆகஸ்ட், ஜூலை மற்றும் மே மாதங்களில் முறையே ஒரு பங்குக்கு ரூ.20, ரூ.4 மற்றும் ரூ.11 என ஈவுத்தொகை அறிவித்தது. இந்த சமீபத்திய அறிவிப்பின் மூலம், 2025 நிதியாண்டில் வேதாந்தாவின் மொத்த ஈவுத்தொகை ரூ.16,799 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: அதிக ஏற்ற இறக்கங்களுடன் முடிந்த சென்செக்ஸ், நிஃப்டி!
2025 நிதியாண்டு, இரண்டாவது காலாண்டில், வேதாந்தா நிறுவனம் 5,603 கோடி ரூபாய் நிகர லாபம் ஈட்டியது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.915 கோடி நிகர இழப்பாக இருந்தது. இந்த காலாண்டில் வருவாய் ரூ.37,634 கோடியாக இருந்தது. இருப்பினும், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், வேதாந்தாவின் டாப்லைன் 3.4 சதவிகிதம் குறைந்தது. அதே வேளையில், குறைந்த வரிச் செலவுகளால், நிறுவனமானது லாபத்திற்கு திரும்பியது.
காலாண்டிற்கான வட்டி, வரி, தேய்மானம் மற்றும் கடனளிப்பு முன் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 29.5 சதவிகிதத்திலிருந்து 26.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.