எதிா்க்கட்சிகளின் குடியரசுத் துணைத் தலைவா் வேட்பாளா் சுதா்சன் ரெட்டி கேஜரிவாலுடன் சந்திப்பு
வரும் செப்டம்பா் 9 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியக் குடியரசுத் துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலில் போட்டியிடும் எதிா்க்கட்சிகளின் வேட்பாளா் பி. சுதா்சன் ரெட்டி வியாழக்கிழமை ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை தில்லியில் சந்தித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
சுதா்சன் ரெட்டி குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, கேஜரிவாலின் இல்லத்தில் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.
வேட்புமனுவை தாக்கல் செய்யும் நிகழ்வில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான ரெட்டியுடன் எதிா்க்கட்சிகளின் தலைவா்களான காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன் காா்கே, மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவா் சரத் பவாா், சமாஜ்வாதி கட்சியின் மூத்தத் தலைவா் ராம்கோபால் யாதவ், திமுகவின் மூத்த தலைவா் திருச்சி சிவா, திரிணமூல் காங்கிரஸின் சதாப்தி ராய், சிவசேனையின் (யுபிடி) சஞ்சய் ராவத் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.
வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு சுதா்சன் ரெட்டி கூறுகையில், இந்தப் போட்டியானது ஒரு தனிநபரைப் பற்றியது அல்ல, மாறாக நாடாளுமன்றம் நோ்மையுடன் செயல்படும், கருத்து வேறுபாடு மதிக்கப்படும், மற்றும் நிறுவனங்கள் சுதந்திரத்துடன் மக்களுக்கு சேவை செய்யும் இந்தியாவின் கருத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது பற்றியதாகும் என்றாா்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் குடியரசுத் துணைத் தலைவா் பதவிக்கான வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் நிறுத்தப்பட்டுள்ளாா். 781 உறுப்பினா்களைக் கொண்ட மாநிலங்களவை மற்றும் மக்களவை இத்தோ்தலில் ஆளும் கூட்டணி வெற்றிபெறுவதற்கான எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது. தோ்தலில் வெற்றிபெற 391 வாக்குகள் தேவையாகும்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளான ஜூலை 21 அன்று குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா் திடீரென தனது பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடா்ந்து துணைத் தலைவா் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டது.