``என்னுடைய சொந்த பணத்தை தருவேன்'' - சுனிதா வில்லியம்ஸ் குறித்த கேள்விக்கு ட்ரம்ப் பதில்!
விண்வெளியிலேயே ஒன்பது மாதங்களை கழித்தப் பிறகு, நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பட்ச் வில்மோர் கடந்த மார்ச் 18-ம் தேதி பூமிக்கு திரும்பினர்.
இவர்கள் விண்வெளிக்கு சென்ற விண்கலனில் கோளாறு ஏற்பட்டது தான் இந்தத் தாமதத்திற்கு முக்கிய காரணம். இவர்கள் தற்போது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலன் மூலம் பூமி திரும்பியுள்ளனர்.

சுனிதா மற்றும் வில்மோரின் சம்பளம் என்ன?
சுனிதா மற்றும் வில்மோர் திட்டமிட்ட காலத்தை விட, அதிக காலங்கள் விண்வெளியில் செலவிட்டுள்ளதால், 'இவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுமா?' என்ற கேள்வி பரவலாக உள்ளது.
அமெரிக்க சட்டத்தின் படி, நாசாவின் விண்வெளி வீரர்களும் அரசு ஊழியர்களே. அதனால், இவர்களுக்கு அதிக நாட்கள் விண்வெளியில் தங்கி இருத்தல், வார இறுதி நாட்கள், விடுமுறைகளுக்கு என கூடுதல் சம்பளம் எல்லாம் கிடையாது.
இவர்கள் விண்வெளிக்கு சென்றதுக்கூட அலுவல் சம்பந்தமான பயணமே. அதனால், இவர்களது பயண செலவு, தங்கும் செலவு, உணவு செலவு ஆகியவற்றை நாசா பார்த்துக்கொள்ளும். இவர்களுக்க்கு தின செலவு என நாசா ஒரு நாளுக்கு கூடுதலாக 5 டாலர்கள் தரும் அவ்வளவு தான்.
அப்படி பார்த்தால், சுனிதா மற்றும் வில்மோர் மொத்தம் 286 நாள்களை விண்வெளியில் கழித்துள்ளனர். இவர்களுடைய சம்பளமான 94,998 டாலர்கள் - 1,23,152 டாலர்கள் (ரூ.81,69,681 - 1,05,91,115) போக, கூடுதலாக 1,430 டாலர்கள் (ரூ.1,22,980) கிடைக்கும்.
எலான் மஸ்க் இல்லையென்றால்...
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடன், 'இவர்களுக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப்படுமா?' என்று கேள்வி கேட்டதற்கு, "இதுவரை என்னிடம் யாரும் அப்படி கூறவில்லை. ஒருவேளை, கொடுக்க வேண்டுமானால், என்னுடைய சொந்த பணத்தை தருவேன்" என்று பதிலளித்துள்ளார்.

மேலும், சுனிதா மற்றும் வில்மோரின் பயணம் குறித்து பேசும்போது, "எலான் இல்லையென்றால், இன்னும் அவர்கள் கூடுதல் காலமாக விண்வெளியிலேயே இருந்திருக்க வேண்டும். யார் அவர்களை திரும்ப கொண்டு வர முடியும்.
விண்வெளியில் உடலின் தன்மை 9 - 10 மாதங்களுக்கு பிறகு மோசமடைய தொடங்கிவிடும். நம்மிடம் இன்னும் நேரம் இல்லையென்றால் என்ன ஆகியிருக்கும்? எலான் மஸ்க் தற்போது நிறைய கஷ்டங்களை அனுபவித்து வருகிறார்" என்று கூறியுள்ளார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
