``என்னுடைய நிழலைக் கூட பார்க்க முடியவில்லை'' - அமெரிக்க சிறை அனுபவம் குறித்து பகிரும் இந்தியர்
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து ஆவணம் செய்யப்படாத வெளிநாட்டு மக்கள் வெளியேற்றம், ஹமாஸ் ஆதரவு போன்றவற்றிக்கு குரல் எழுப்புவர்களுக்கு கடுமையான தண்டனை என அவரது அதிரடிகள் நீண்டு கொண்டு போகின்றது.
பதர் கான் சூரி -இவர் இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர் மற்றும் அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தின் விசிட்டிங் ஸ்காலர் ஆவார்.
கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி, 'தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருக்கிறார்' என்றும், பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் ஹமாஸிற்கு ஆதரவாகப் பேசினார் என்றும்... வர்ஜீனியா ஆர்லிங்டனில் தனது வீட்டில் இருந்த இவரை அதிரடியாக கைது செய்துள்ளது அமெரிக்காவின் பிளைன் கிளாத் ஃபெடரல் ஏஜென்சி.

தற்போது தான் சிறையில் இருந்த அனுபவத்தை செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பகிர்ந்துள்ளார் பதர் கான் சூரி.
"கை, கால், உடம்பு என அனைத்து இடங்களிலும் என்னை சங்கிலியால் கட்டியிருந்தனர். முதல் ஏழு - எட்டு நாட்களுக்கு நான் எங்கே இருக்கிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. என்னுடைய நிழலைக் கூட நான் பார்க்கவில்லை. என்னை மனிதனாக அல்லாமல் மிகக் கேவலாமாக நடத்தினார்கள்.
நான் இருந்த இடம் சுகாதாரமாகவே இல்லை. அது குறித்து புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நான் சிறையில் இருக்கும்போது, என் குடும்பத்தை நினைத்து மிகவும் வருந்தினேன். என்னுடைய குழந்தைகள் என்னால் கஷ்டப்படுகிறார்கள். என்னுடைய முதல் பையனுக்கு ஒன்பது வயது தான். அடுத்ததாகப் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ஐந்து வயது.
என்னுடைய ஒன்பது வயது மகனுக்கு நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியும். அவன் அழுது கொண்டே இருக்கிறான்... அவனுக்கு மனநல உதவி வேண்டும் என்று என் மனைவி என்னிடம் சொல்லுவார். அப்போது எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கும்".
இவரது வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தின் படிகள் ஏற, நீதிபதி பாட்ரிசியா கில்ஸ் 'பேச்சுரிமையை இந்த நடவடிக்கை மீறுகிறது' என்று சூரியை விடுதலை செய்துள்ளார்.

இந்த வழக்கில் வாதாடும் போது, சூரியின் வழக்கறிஞர் எடுத்துவைத்த முக்கிய கருத்து...
"சூரியின் மனைவி பாலஸ்தீனத்தைப் பாரம்பரியமாக கொண்டவர். அதனால், அவரும், அவரது மனைவியும் அமெரிக்காவின் இஸ்ரேல் ஆதரவுக் கொள்கைக்கு எதிராக செயல்படுவார்கள் என்று எண்ணி சூரி கைது செய்யப்பட்டுள்ளார்" என்பது ஆகும்.
இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.