``என்னைக் காப்பாற்றிய அந்த 2 படங்கள்..'' - கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சசிகுமார் ஓப்பன் டாக்
மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு நடைபெற்றது. அதில் பேசிய நடிகர் சசிகுமார், "ராஜுமுருகன் படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கிறேன். அவருடைய ஒவ்வொரு எழுத்துகளும், வார்த்தைகளும் கம்யூனிசம் பேசும். இந்த தைரியம் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்க்கும் இருக்கும். மனிதம் பேசும் இரண்டு படங்கள் என்னைக் கப்பாற்றியது.

ஒன்று அயோத்தி இன்னொன்று நந்தன். இந்தப் படத்தை பார்த்ததால்தான் என்னை இந்த நிகழ்வுக்கு அழைத்தேன் என்றார்கள். அப்போது நானும் அந்த இரண்டு படங்களில் கம்யூனிசம் பேசி இருக்கிறேன் என்று அர்த்தம்.
நந்தன் படத்தைப் பார்த்துவிட்டு தோழர் பாலகிருஷ்ணன் ஐயா சென்னை அலுவலகத்திற்கு என்னை அழைத்து பாராட்டிய விஷயத்தை என்னால் மறக்கவே முடியாது. அதுமட்டுமின்றி 'சில இடங்களில் பஞ்சாயத்து தலைவர்களைக் கொடி ஏற்றவிடாமல் செய்கிறார்கள்.
அதற்கு எதிராக எங்களுடைய தோழர்கள் பல இடங்களில் போராடிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் 'நந்தன்' படத்தின் மூலம் இந்த விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள். அது பெரும்பாலான மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. பல காலத்திற்கு அது நிலைத்து நிற்கும்' என்று என்னிடம் சொன்னார்.

அந்தப் பாராட்டுதான் என்னை இந்த மேடை வரைக்கும் அழைத்து வந்திருக்கிறது. கம்யூனிசம் கலையை ஊக்குவிக்கிறது. சாதாரணமாக இருந்தாலே கம்யூனிஸ்ட் என்று சொன்னார்கள். அப்படி பார்த்தால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான் போல." என்று கூறியிருக்கிறார்.