9 மாதங்களுக்குப்பின் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்!
என்ன, இத்தனைப் படங்களில் சிவாஜியின் வீட்டைப் பார்த்திருக்கிறோமா! விஜய் படத்திலுமா?
தமிழகத்தில், ஒரு கதாநாயகனின் வீட்டிலேயே இத்தனைத் திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருக்கிறதா என்று இந்தத் தகவலை அறியும்போது பலருக்கும் ஆச்சரியம் ஏற்படுகிறது.
திரையுலகில் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சிவாஜி கணேசனின் புகழ் என்றும் அழியாது. எப்போதும் சிவாஜியின் பெருமை பேசப்பட்டுக்கொண்டேதான் இருக்கும்.
ஆனால், அவரது வாரிசுகளால், அவரைப் பற்றி இன்று சில வேதனையான செய்திகளில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
1959ஆம் ஆண்டு சிவாஜி கணேசன் அந்த வீட்டை வாங்கி, இரண்டு ஆண்டுகள் தேக்கு மரத்தால் உள் அலங்காரங்கள் செய்யப்பட்டு, அன்னை இல்லம் என பெயரிட்டார். சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கப்பட்டதையடுத்து, அவர் வீடு இருந்த தெற்கு போக் சாலை என்ற பெயரை மாற்றி செவாலியே சிவாஜி கணேசன் சாலை என பெயரிட்டது சென்னை மாநகராட்சி.
தமிழகத்தில், நடிகர் சிவாஜியின் இல்லத்துக்கு தாய் ராஜாமணி நினைவாக அன்னை இல்லம் என்று பெயரிட்டார். இந்த இல்லம் நடிகர் சிவாஜி நடித்த பல படங்கள் படமாகியிருக்கிறது. அதாவது எத்தனையோ படங்களின் படப்பிடிப்பு நடந்த இடமாகவும், தமிழ்த் திரைப்பட ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்த பல படங்கள் இங்கு உருவானதையும் பலரும் பேசிப் பேசி மாய்கிறார்கள்.
அதாவது, 1960ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி நடிப்பில் வெளியான பாவை விளக்குத் திரைப்படம்தான், அன்னை இல்லத்தில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் காட்சியில், சிவாஜி தனது நண்பர்களுக்கு பாவை விளக்கு சாவலை விளக்கும் காட்சியின் பின்னணியில் நாம் பார்ப்பது அன்னை இல்லம்தான்.
சிவாஜி நடித்த படம் என்றால் மறக்கவே முடியாத பாசமலர் படிப்பிடிப்பும் இங்குதான் நடந்துள்ளது. அதாவது, பணக்காரராக இருக்கும் சாவித்திரிக்கு, தனது மொத்த சொத்தையும் கொடுத்துவிட்டு, ஏழையான சிவாஜி பல காலத்துக்குப் பின் காந்தல் உடையுடன் சகோதரியைப் பார்க்க வரும்போது, அவரை அந்த வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டார்கள், சோகத்துடன் தனது வீட்டைப் பார்ப்பது போல ஒரு காட்சி இருக்கும். அது அன்னை இல்லம்தான்.
அது மட்டுமா, பந்தபாசம், பார் மகளே பார் படத்தின் பல காட்சிகள் அதாவது வீட்டுக்குள் நடக்கும் காட்சிகள் கூட அன்னை இல்லத்தில்தான் படமாக்கப்பட்டிருக்கிறதாம்.
தங்கப்பதக்கம் படத்தில், குழந்தையைக் கடத்தியவர், முதலாளிக்கு போன் போட்டு மிரட்டும் காட்சி வரும். அதில், முதலாளி நின்றுகொண்டு பேசும் காட்சிகள் அன்னை இல்லத்தில் எடுக்கப்பட்டவை. திரிசூலம் படத்தின் முதல் காட்சியும், இறுதிக் காட்சியும் அன்னை இல்லத்தில் எடுக்கப்பட்டவையாம்.
ரத்தபாசம் படத்தில், அன்னை இல்லத்தில்தான், காவல்துறை அதிகாரி உடையில் சிவாஜி மிடுக்காக நடந்து வரும் காட்சி படம்பிடிக்கப்பட்டதாம்.
அவ்வளவுஏன். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தெறி படத்தில், வில்லன் மகேந்திரன் வரும் காட்சிகளே அன்னை இல்லத்தில்தான் படமாக்கப்பட்டுள்ளது.
இதுபோல ஒரு சில காட்சிகள் மட்டும்கூட அன்னை இல்லத்தில் எடுக்கப்பட்டுள்ளது. கௌரவம் படத்தின் முதல் காட்சியில் கார் ஒன்று அன்னை இல்லத்துக்குள் நுழையும் காட்சியும், கலாட்டா கல்யாணம் படத்தில் செந்தாமரை தோட்டத்தில் பேப்பர் படிக்கும் காட்சியும், திருடன் படத்தில் கார் பங்களாவுக்குள் வரும் காட்சியும் இங்குதான் எடுக்கப்பட்டதாம்.
இன்னும் பல காட்சிகள் இங்கு எடுக்கப்பட்டுள்ளன. திரையுலகின் பெருமையாக விளங்கும் சிவாஜி மட்டுமல்ல, சிவாஜியின் வீடும் திரையுலகின் பெருமைகளில் ஒன்றாகவே அங்கம் வகிக்கிறது என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.