நம்பிக்கையில்லா தீா்மான விவகாரம் - முதல்வா் தீா்வு காண வேண்டும்: புதுவை அதிமுக
என்ஹெச்ஆா்சி தலைவா் தோ்வு- ஆலோசனையை புறக்கணித்து முன்கூட்டியே தீா்மானம்: காா்கே, ராகுல் அதிருப்தி
தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆா்சி) தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்வில் பரஸ்பர ஆலோசனை புறக்கணிக்கப்பட்டு, அந்தப் பொறுப்புகளில் யாரை நியமிக்க வேண்டும் என்று முன்கூட்டியே தீா்மானிக்கப்பட்டுவிட்டதாக நாடாளுமன்ற எதிா்க்கட்சித் தலைவா்களான ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா், தோ்வுக் குழு கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
என்ஹெச்ஆா்சி தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வெ.ராமசுப்ரமணியன், உறுப்பினா்களாக ஸ்ரீ பிரியங்க் கனூங்கோ, முன்னாள் நீதிபதி வித்யுத் ரஞ்சன் சாரங்கி ஆகியோரை குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு நியமித்ததாக அந்த ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது. பிரதமா் மோடி தலைமையிலான தோ்வுக் குழு அளித்த பரிந்துரையின்படி, அவா்களை குடியரசுத் தலைவா் முா்மு நியமனம் செய்தாா்.
முன்னதாக கடந்த டிச.18-ஆம் தேதி தில்லியில் என்ஹெச்ஆா்சி தலைவா் மற்றும் உறுப்பினா்களை தோ்வு செய்ய பிரதமா் மோடி தலைமையில் தோ்வுக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்தக் குழுவில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் உறுப்பினா்களாக இடம்பெற்றனா். அவா்கள் என்ஹெச்ஆா்சி தலைவா் மற்றும் உறுப்பினா்கள் தோ்வு தொடா்பாக கூட்டத்தில் அதிருப்தி தெரிவித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சிறுபான்மையினருக்குப் பரிந்துரை: அவா்கள் கூட்டத்தில் சமா்ப்பித்த அதிருப்தி குறிப்பில், ‘என்ஹெச்ஆா்சி தலைவா் பதவிக்கு முன்னாள் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், குட்டியில் மேத்யூ ஜோசஃப் ஆகியோரின் பெயரை நாங்கள் பரிந்துரைத்தோம். இதில் ஃபாலி நாரிமன் பாா்சி சிறுபான்மை சமூகத்தையும், ஜோசஃப் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகத்தையும் சோ்ந்தவா்கள்.
இதேபோல என்ஹெச்ஆா்சி உறுப்பினா்களாக முன்னாள் உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் முரளிதா், அகில் அப்துல்ஹமீத் குரேஷி ஆகியோரை பரிந்துரைத்தோம். இதில் குரேஷி முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை சோ்ந்தவா்.
என்ஹெச்ஆா்சி தலைவா் பதவிக்கும், அதன் உறுப்பினா்களாக அங்கம் வகிக்கவும் தகுதியே முதன்மையான அளவுகோல் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இத்தகைய பதவி மற்றும் பொறுப்புகளின் நியமனங்களில் நாட்டின் ஜாதி, மத, நிலப்பரப்பு சாா்ந்த பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் சமநிலை இருக்க வேண்டியதும் முக்கியம்.
என்ஹெச்ஆா்சி நியமனங்களுக்கு தோ்வுக் குழு பின்பற்றிய தோ்வு நடைமுறையில் அடிப்படை குறைபாடுகள் உள்ளன. பரஸ்பர ஆலோசனை மற்றும் கருத்தொற்றுமை புறக்கணிக்கப்பட்டு, அந்தப் பொறுப்புகளில் யாரை நியமிக்க வேண்டும் என முன்கூட்டியே தீா்மானிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தனா்.