அசுரனுடன் கைகோர்க்கும் லப்பர் பந்து இயக்குநர்! தனுஷின் புதிய பட அப்டேட்!
``என் நெஞ்சில் நடந்து செல்லுங்கள்'' - முதல்வரைப் பார்க்க வழி கேட்ட மூதாட்டிக்கு சுரேஷ் கோபி பதில்
மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி
கேரள மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு முதன்முதலில் எம்.பி ஆனவர் நடிகர் சுரேஷ்கோபி. அவர் மத்திய இணை அமைச்சராக உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு திருச்சூரில் நடந்த பூரம் விழாவில் போலீஸ் கெடுபிடி உள்ளிட்ட காரணங்களை முன்னிறுத்தி பா.ஜ.க போராட்டங்களை முன்னெடுத்தது.

அதுபோன்று சி.பி.எம் நிர்வாகத்தின் கீழ் உள்ள கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் பணம் மோசடி நடைபெற்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பொதுமக்கள் செலுத்திய தொகையைத் திரும்பப்பெற முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் இ.டி ரெய்டு நடத்தி சுமார் ஒரு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. இவற்றையெல்லாம் சாதகமாகப் பயன்படுத்தியே பா.ஜ.க வென்றதாக அப்போது கருத்து எழுந்தது.
இந்த நிலையில் மத்திய அமைச்சராக உள்ள நடிகர் சுரேஷ்கோபி திருச்சூர் நாடாளுமன்ற தொகுதியில் 'கலுங்கு செளகிருத சம்வாத யாத்ரா' என்ற பெயரில் பொதுமக்களுடன் நட்புடன் உரையாடும் நிகழ்வை நடத்தி வருகிறார்.
அதில் குறைகளைச் சொன்ன வயது முதிர்ந்த பெண்ணை அவமதிக்கும் வகையில் சுரேஷ்கோபி பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இரிஞ்ஞாலக்குடா பகுதியில் நடைபெற்ற நட்புடன் உரையாடும் நிகழ்ச்சியில், 'கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட தனது பணத்தை மீட்டுத்தர உதவ முடியுமா?' என வயதான பெண் ஆனந்தவல்லி கேட்டார்.
அதற்கு பதிலளித்துப் பேசிய சுரேஷ்கோபி, "கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் இருந்து இ.டி பறிமுதல் செய்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு கேரள முதல்வர் தயாரா? இ.டி பறிமுதல் செய்த பணத்தை திரும்பவும் கூட்டுறவு வங்கியில் செலுத்தி உங்களுக்குத் திருப்பித் தரும் ஏற்பாடு செய்யத் தயார் என்றால், அந்தப் பணத்தை உங்கள் முதல்வரிடம் பெற்றுக்கொள்ளச் சொல்லுங்கள்.
வெளிப்படையாகத்தான் நான் இதைச் சொல்கிறேன். அல்லது உங்கள் எம்.எல்.ஏ-வைப் பார்த்துக் கேளுங்கள்" என்றார்.
சுரேஷ்கோபியின் பதிலைக் கேட்ட ஆனந்தவல்லி, 'முதல்வரைத் தேடி நான் செல்ல முடியுமா?' எனக் கேட்டார்.
அதற்கு பதிலளித்த சுரேஷ்கோபி, "அப்படியானால் என் நெஞ்சின்மீது நடந்து செல்லுங்கள். உங்கள் அமைச்சர் இங்கு வசிக்கிறாரா இல்லையா?" என்றார்.
அதைக்கேட்டு அங்கு கூடியிருந்தவர்கள் சத்தமாக சிரித்தனர். ஆனாலும், ஆனந்தவல்லி, "எங்கள் அமைச்சர் நீங்கள்தானே?" என்றார்.
அதற்கு பதிலளித்த சுரேஷ்கோபி, "இல்லை, நான் இந்த நாட்டின் அமைச்சர். நான் அதற்கான பதிலையும் தெரிவித்துவிட்டேன். நீங்கள் முதல்வரை சந்தித்து அந்தப் பணத்தை வாங்கச் சொல்லுங்கள். அதன்பிறகு பணத்தைப் பங்கிட்டு வழங்கச் சொல்லுங்கள்" என்றார்.
கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க உதவமுடியுமா எனக் கேட்ட வயதான பெண்ணை அவமானப்படுத்தும் விதமாக மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி பேசியதாக விவாதம் எழுந்தது.
இதுகுறித்து மூதாட்டி ஆனந்தவல்லி கூறுகையில்,
"நான் 1.45 லட்சம் ரூபாய் கருவன்னூர் கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்துள்ளேன். தலையில் நரம்பு சம்பந்தமான பிரச்னை உள்ளதால் மருந்து வாங்க மாதம் 2000 ரூபாய் தேவைப்படுகிறது.
வங்கியில் பணம் கேட்டும் கிடைக்காததால்தான் அமைச்சர் சுரேஷ்கோபியிடம் கேட்டேன். அதற்கு சுரேஷ்கோபி கூறிய கருத்துகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தின.
எம்.பி-யிடம் இருந்து நல்ல வார்த்தைகள் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் அவர் கூறிய வார்த்தைகள் என் மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தின.

சுரேஷ்கோபி ஓட்டுக்கேட்டு வந்த சமயத்தில் வெற்றி பெற்றால் கருவன்னூர் வங்கி பணத்தை திரும்பப் பெற நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தார்.
அதனால்தான் அவரிடம் அதுபற்றி கேட்டேன். இதற்கிடையே எனக்கு பணம் தேவைப்படுவதை அறிந்த கருவன்னூர் கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தலையிட்டு எனக்கு பணம் கிடைக்க ஏற்பாடு செய்தனர்.
எனக்குத் தேவையான பணம் கருவன்னூர் கூட்டுறவு வங்கியிலிருந்து கிடைத்தது. நான் சுரேஷ்கோபியைப் பார்த்ததற்குப் பதில் வங்கி அதிகாரிகளைப் பார்த்திருக்கலாம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs