நாக்கைப் பிளவுப்படுத்தி டிரெண்டிங் டாட்டூ - கைதுசெய்யப்பட்ட இருவர்; திருச்சி அதி...
எலான் எனும் எந்திரன் 8: சுளீரென சுட்ட கிரிப்டோ - சறுக்கல்களும் , முரண்பாடுகளும்
447 பில்லியன் அமெரிக்க டாலர். இது தான் ப்ளூம்பெர்க் பில்லியனர் இண்டெக்ஸ் கணக்குப் படி, எலான் மஸ்கின் இன்றைய (2024 டிசம்பர் 12) சொத்து மதிப்பு. எலான் மஸ்குக்கும், இரண்டாமிடத்தில் இருக்கும் ஜெஃப் பிசாசுக்குமே இடைவெளி சுமார் 200 பில்லியன் டாலர். உலகில் முதல்முறையாக 100 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கடந்தது பில்கேட்ஸ், 200 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கடந்தது ஜெஃப் பிசாஸ் என்றால் 300 & 400 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கடந்த முதல் நபர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார் எலான் மஸ்க்.
இந்திய ரூபாய் மதிப்பில் எலான் மச்கின் சொத்தைக் கணக்கிட்டால் 37 லட்சம் கோடி ரூபாய். 2024 - 25 நிதியாண்டில் இந்திய அரசாங்கத்தின் வருவாய் வருமான மதிப்பீடே (Revenue Receipt Estimate) 31.29 லட்சம் கோடி ரூபாய் தான். இந்த மதிப்பு அடுத்த சில ஆண்டுக்குள் 500 பில்லியனைத் தொட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
வெறும் சொத்து பத்துக்கள் மட்டுமின்றி, டைம் இதழின் உலகின் சக்தி வாய்ந்த ஆளுமைமிக்க நபர்களில் ஒருவராகவும் கடந்த 2010, 2013, 2018, 2021 ஆகிய காலகட்டங்களில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
எலான் மஸ்க் ஒருவகையில், வணிக சர்வாதிகாரி எனலாம். தனக்குத் தகுந்தாற் போல, அரசின் சட்ட திட்டங்கள் தொடங்கி, வழிகாட்டுதல்கள் வரை அமெரிக்காவில் பல விஷயங்களை மாற்றியுள்ளார், அரசாங்கத்தின் மூலம் பல நன்மைகளையும் பெற்றுள்ளார். பதிலுக்கு தன் சேவை மற்றும் பொருட்களின் தரத்தில் அவர் குறை வைக்கவில்லை எனலாம்.
இத்தனை சக்தி வாய்ந்த, உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்குக்கும் சில வியாபாரங்கள், முதலீட்டு முடிவுகள் கைகூடவில்லை. உதாரணத்துக்கு கிரிப்டோகரன்சி. எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் பிட்காயினில் ~$1.5 பில்லியன் முதலீடு செய்து அதை கணிசமான நஷ்டத்துக்கு விற்று வெளியேறியது நினைவிருக்கலாம். அதே போல பிட்காயின் மூலம் டெஸ்லாவை வாங்கலாம் என்கிற அறிவிப்பையும் அதிவிரைவில் பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது.
அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இல்லாத கிரிப்டோவை அதீதமாக ஆதரித்த இதே எலான் மஸ்க் தான், இப்போது டொனால்ட் டிரம்பில் அமைச்சரவையில் ஒரு தனி துறையையே நிர்வகிக்கப் போகிறார்.
பிட்காயினை எடுக்க அதிகமாக மரபுசார் எரிபொருள் பயன்படுத்துவதாகச் சொல்லி பிட்காயினை கைவிட்டார் எலான். ஆனால் அதே எலான் மஸ்க் தான் தன் பிரைவேட் ஜெட்டை அதிகமாகப் பயன்படுத்தி, சராசரி மனிதர்களை விட அதிக மரபுசார் எரிபொருளை பயன்படுத்துவதாகவும், கார்பனை வெளியேற்றுவதாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.
எலான் மஸ்க் ஒரு மாஸ் சைக்காலஜிஸ்ட் என இத்தொடரின் முதல் அத்தியாத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதற்கு ஆகச் சிறந்த சாட்சி இவர் தன் ட்விட்டர் பக்கத்தைக் கையாள்வது தான்.
தன் ட்வீட்கள் மூலம் நிறுவன பங்கு மதிப்பை உயர்த்துவது, தான் தாக்க விரும்பும் நபர்களைக் குறித்து எலான் விமர்சித்த பிறகு, அவரது ரசிகர்கள் எலான் விமர்சித்தவரை மேலும் தரக்குறைவாக தாக்கிப் பேசுவது, தன் அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பதன் மூலம், தனக்கு விருப்பமான தலைவர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரசாரம் செய்வது என ட்விட்டரை கனகச்சிதமாகப் பயன்படுத்தி வருகிறார் எலான்.
வெறும் பயனராக ட்விட்டரில் தன் பயணத்தைத் தொடங்கிய எலான் மஸ்க், இன்று அந்நிறுவனத்தின் தலைவர். 2022 அக்டோபரில் ட்விட்டரை எலான் வாங்கிய உடனேயே, அதன் சிஇஓ பராக் அகர்வால் உட்பட பல முக்கிய பொறுப்பில் இருந்த அதிகாரிகளை வெளியேற்றினார். அதனைத் தொடர்ந்து பல இடைநிலை & கடைநிலை ஊழியர்களையும் வெளியேற்றினார். ட்விட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றினார்.
ப்ளூ டிக் வாங்க மாதந்தோறும் பணம் செலுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்தார். யூடியூபைப் போல ட்விட்டரிலும் பதிவிடுபவர்களுக்கு பணம் வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். ட்விட்டரின் கடுமையான சட்ட திட்டங்களைத் தளர்த்தினார், சர்ச்சைக்குரிய கருத்துக்களைப் பதிவிடும் பல பழமைவாத குழுக்களின் ட்விட்டர் கணக்கை மீண்டும் செயல்பட அனுமதித்தார். விளைவு, ட்விட்டர் ஒரு வெறுப்பு பேச்சுக்கான தளமாக மாறியது.
ட்விட்டரிலேயே வாக்கெடுப்பு நடத்தி தன் சி இ ஓ பதவியிலிருந்து விலகி, நிறுவன செயல் தலைவர் & முதன்மை டெக்னாலஜி அதிகாரி பதவியில் அமர்ந்தார். இன்று பல முன்னணி அமெரிக்க பத்திரிகையாளர்கள், ட்விட்டர் (எக்ஸ்) தளத்திலிருந்து வெளியேறும் அளவுக்கு போய்விட்டது. சுருக்கமாக ட்விட்டர் டீல் தவறான முடிவென தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் விமர்சிக்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களை வெற்றிகரமாக வழிநடத்திய எலான் மஸ்க், ட்விட்டரை வழி நடத்தவில்லை. எக்ஸின் கணக்கு வழக்குகளும் மேம்பட்டதாகத் தெரியவில்லை.
ட்விட்டரை வாங்கிய போது, பேச்சு சுதந்திரத்தை காப்பாற்றவே வாங்கினேன் என்று சொல்லிக் கொண்டிருந்த எலான், தனக்குப் பிடித்த சித்தாந்தங்களுக்கு மட்டுமே அந்த சுதந்திரத்தை வழங்கினார். அது போக ட்விட்டரில் தன் பிரைவேட் ஜெட் தொடர்பான பொதுவெளியில் கிடைக்கும் பயண விவரங்களை “எலான் ஜெட்” என்கிற பெயரில் வெளியிட்டுக் கொண்டிருந்த கணக்கையும் எலான் மஸ்கே முடக்கினார்.
ஹைப்பர் லூப், டெஸ்லாவின் ஆட்டோ பைலட், தன் ரத்த சொந்தக்காரர் நடத்திய சோலார் சிட்டி என்கிற நிறுவனத்தை அதிக விலை கொடுத்து வாங்கி… சொந்தக்காரரை காப்பாற்றியது, பல கோடிகள் கொட்டியும் தி போரிங் கம்பெனி பெரிதாக சோபிக்காதது, டெஸ்லாவின் ரோட்ஸ்டர் மாடல் கார் தொடர்ந்து தாமதமாகி வருவதென சில சொதப்பல்களையும் எலான் மஸ்க் எதிர்கொண்டு வருகிறார்.
இப்படி ஒரு ரெக்கார்ட் கம்பெனியை எலான் மஸ்க் நடத்திக் கொண்டிருக்கிறார் என்பதே பலருக்கு தெரியாது. முதலில் RIP Harambe பாடலை சவுண்ட் கிளவுடில் வெளியிட்டார் எலான். அதனைத் தொடர்ந்து Dont Doubt Ur vibe என்கிற பெயரில் அவரே பாடலை எழுதி தன் சொந்தக்குரலில் பாடி வெளியிட்டார். பெரிதாக மக்களின் கவனத்தை ஈர்க்கவில்லை.
இது போக அயர்ன் மேன் கதாபாத்திரத்தை, எலான் மஸ்கின் குணாதிசயங்களை ஒத்து வடிவமைக்கப்பட்டதாக வலைதளங்களில் சில செய்திகளைப் பார்க்க முடிகிறது. அயர்ன் மேன், மென் இன் பிளாக் இண்டர்நேஷனல் போன்ற சில படங்களில் கேமியோ கொடுத்திருக்கிறார் எலான் மஸ்க்.
2001ல் எலான் மஸ்கால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, 2002 - 2018 வரையான காலத்தில் சுமார் 25 மில்லியன் டாலரை லாபநோக்கற்ற அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அதில் கிட்டத்தட்ட பாதித் தொகை மஸ்கின் ஓப்பன் ஏஐ அமைப்புக்கே வழங்கப்பட்டது.
கடந்த 2021 நவம்பரில் எலான் மஸ்க் சுமார் 5.7 பில்லியன் டாலர் மதிப்பிலான டெஸ்லா பங்குகளை லாபநோக்கற்ற தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடை வழங்கியதாகக் பங்குச் சந்தையிடம் தெரிவிக்கப்பட்டது. அந்த நன்கொடை வழங்கப்பட்டது மஸ்க் ஃபவுண்டேஷன் அமைப்புக்குத் தான்.
வெளியே பார்க்க நன்கொடை போலத் தோன்றினாலும், எலானின் பெரும்பாலான பணம் தன்னைச் சார்ந்த, தன் நிறுவனங்கள் சார்ந்த, தன் விருப்பங்கள் சார்ந்த நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கின்றன.
இத்தனை முரண்பாடுகளுக்குச் சொந்தக்காரரான எலான் மஸ்க், அடிப்படை விஷயங்களில் கூட அறிவியலுக்கு எதிராகப் பேசியதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்.