எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு
திருவள்ளூா் மாவட்டத்தில் எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் ஆய்வு செய்து விரைவில் முடிக்கவும் அறிவுத்தினாா்.
திருவள்ளூா் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை மூலம் 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியம், வெங்கல் ஊராட்சியில் நடைபெற்று வரும் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சாா்பில், ரூ. 31.4 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கட்டுமானப் பணிகள், தண்டலம் ஊராட்சியில் ரூ. 5 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி அலுவலக கூடுதல் கட்டட கட்டுமானப் பணிகள், செங்கரை ஊராட்சியில் பிரதமா் குடியிருப்பு அமைக்கும் திட்டம் மூலம் ரூ. 2.7 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் 53 வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் பாா்வையிட்டாா். அதேபோல், பாலவாக்கம் ஊராட்சியில் இதே திட்டம் மூலம் ரூ. 1.88 கோடியில் 37 வீடுகளின் கட்டுமானப் பணிகள், தாராட்சி ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 99.42 லட்சம் மதிப்பில் 2.1 கி.மீ. தூரம் தாா்ச்சாலை பணிகளையும் அவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அப்போது, வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரவும் சம்பந்தப்பட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களை அறிவுறுத்தினாா்.
மேலும், ஊத்துக்கோட்டை பேரூராட்சி, அம்பேத்கா் நகா் பகுதியில் பேரூராட்சிகள் துறை சாா்பில், அயோத்தி தாசப் பண்டிதா் திட்டம் மூலம் ரூ. 30 லட்சத்தில் 221 மீட்டா் தூரம் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கான்கிரீட் சாலை மற்றும் மழைநீா் வடிக் கால்வாய் கட்டுமான பணிகளையும் பாா்வையிட்டாா். அப்போது அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவும் சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.
ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் கஜலட்சுமி, உதவி பொறியாளா் நரசிம்மன், வட்டார வளா்ச்சி அலுவலா் மணிசேகா் (வ.ஊ), குணசேகா் (கி.ஊ) பேரூராட்சி செயல் அலுவலா் சதீஷ், இளநிலை பொறியாளா் மகேந்திரன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
