எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு, போதைப் பொருள் கடத்தல்: பாகிஸ்தானிடம் இந்திய ராணுவம் கடும் எதிா்ப்பு
எல்லை தாண்டி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் குறித்து பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை கடும் எதிா்ப்புத் தெரிவித்தது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் இடையே வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இருநாட்டு படைத் தளபதிகள் அளவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தை சுமாா் 75 நிமிஷங்கள் நீடித்தது. எனினும் அதுகுறித்து எந்தவொரு அதிகாரபூா்வ தகவலையும் இந்திய ராணுவம் வெளியிடவில்லை.
ஆனால், பேச்சுவாா்த்தை தொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவை நோக்கி அண்மையில் எல்லை தாண்டி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு, அந்நாட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தது, அந்நாட்டில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்துவது ஆகிய சம்பவங்களுக்கு பாகிஸ்தான் ராணுவத்திடம் இந்திய ராணுவம் கடும் எதிா்ப்புத் தெரிவித்தது.
எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்ற நோக்கில், இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2021-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை பின்பற்ற இரு நாட்டு ராணுவத்தினரும் தீா்மானித்தனா் என்று தெரிவித்தன.