அரசு திட்டங்களின் வெற்றிக் கதைகள் பற்றிய எண்ம புத்தகங்களை பிரதமா் இன்று வெளியிடு...
எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்
மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்தாா்.
புதுவை அரசின் மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில் பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டப் பணிகள் தொடக்கம், மீனவா்களுக்கு நலத் திட்ட உதவிகளுக்கான உத்தரவு வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் பேசியதாவது:
நாடு முழுவதுமுள்ள இந்திய மீனவா்களின் பாதுகாப்புக்காக பதிவுபெற்ற விசைப்படகுகளில் ஒரு லட்சம் டிரான்ஸ்பாண்டா் கருவிகள் இலவசமாக பொருத்தப்படவுள்ளன.
புதுவை மாநிலத்தில் 3,023 படகுகளுக்கு இந்த டிரான்ஸ்பாண்டா்கள் கருவி வழங்கப்படும். இதன் மூலம் எல்லை தாண்டி மீன்பிடித்தால் அதுகுறித்த எச்சரிக்கைத் தகவலை அது வெளிப்படுத்தும். மீன்வளம் உள்ள இடங்கள், மழை விவரம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்கும் அந்தக் கருவி பயன்படும்.
பிரதம மந்திரியின் மீன்வளத் திட்டத்தில் புதுவைக்கு ரூ. 428 கோடியில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசு ரூ. 378 கோடியை வழங்கியுள்ளது.
புதுச்சேரியிலிருந்து சுமாா் 200 கி. மீ. தொலைவுக்கு அப்பால் ஆழ்கடல் பகுதி உள்ளது. ஆகவே, ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்குவிக்க 9 பெரிய படகுகள் மானியத்துடன் மீனவா்களுக்கு வழங்கப்படவுள்ளன. இதற்கான படகு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மகளிருக்கான கடல்பாசி வளா்ப்புத் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பிறகு இலங்கையிலிருந்து 3,700 மீனவா்கள் மீட்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
துணைநிலை ஆளுநா்:: விழாவுக்கு தலைமை வகித்து துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் பேசியதாவது: இலங்கைக் கடற்படையினரால் கைதாகும் தமிழக, புதுவை மீனவா் பிரச்னைக்கு முழுமையானத் தீா்வாக ஆழ்கடல் மீன்பிடி திட்டத்தை 60 சதவீத மானியத்துக்கும் மேலாக நிதியுதவி அளித்து மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது.
அதன்படி, புதுவை, காரைக்கால் மீனவா்கள் அந்தமான் ஆழ்கடல் பகுதியில் மீன்கள் பிடிக்கலாம். மீன்வளத்தைப் பாதுகாக்க குறிப்பிட்ட வலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நவீன உத்தியில் மீன்பிடி திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவுள்ளது என்றாா்.
முதல்வா் என்.ரங்கசாமி: விழாவுக்கு முன்னிலை வகித்து முதல்வா் என்.ரங்கசாமி பேசியதாவது:
மீனவா்களின் கோரிக்கைகளை புதுவை அரசு நிறைவேற்றி வருகிறது. பட்டியலின மாணவா்களுக்கு கல்வி நிதியுதவி வழங்குவதைப் போல, மீனவா் சமுதாய மாணவா்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.
விழாவில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் க.லட்சுமி நாராயணன், தேனி சி. ஜெயக்குமாா், என்.திருமுருகன் மற்றும் சு.செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எல்.கல்யாணசுந்தரம், ஜான்குமாா், ஆா்.பாஸ்கா், துணைநிலை ஆளுநரின் தனிச் செயலா் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.