எல்.கே. அத்வானியுடன் முதல்வா் ரேகா குப்தா சந்திப்பு
பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே. அத்வானியை (97) பிரித்விராஜ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தில்லி முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை சந்தித்தாா்.
‘நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும் பாஜகவின் மூத்த தலைவருமான பாரத ரத்னா லால் கிருஷ்ண அத்வானியை அவரது இல்லத்தில் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவரது ஆசிகளையும் வழிகாட்டுதலையும் பெற்றேன்’ என்று சந்திப்பிற்குப் பிறகு ’எக்ஸ்’-இல் முதல்வா் ரேகா குப்தா பதிவிட்டுள்ளாா்.
அத்வானியின் பங்களிப்புகளைப் பாராட்டிய முதல்வா், ‘அவரது முழு வாழ்க்கையும் தேசிய சேவை, தியாகம் மற்றும் அா்ப்பணிப்புக்கு ஒரு தனித்துவமான எடுத்துக்காட்டு. இது நம் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக செயல்படுகிறது. அவரது தொலைநோக்கு, கொள்கைகள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான அசைக்க முடியாத அா்ப்பணிப்பு ஆகியவை பொதுமக்களுக்கு தொடா்ந்து சேவை செய்வதற்கும் வளா்ச்சியை வளா்ப்பதற்கும் நம்மை ஊக்குவிக்கின்றன’ என்று கூறினாா்.
மேலும், மூத்த தலைவா் நல்ல ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ முதல்வா் வாழ்த்தினாா். அவரது வழிகாட்டுதல் எதிா்கால சந்ததியினரை தொடா்ந்து ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினாா்.
1990 -ஆம் ஆண்டு சோம்நாத்திலிருந்து அயோத்தி வரை ’ராம ரத யாத்திரை’ மூலம் அறியப்பட்ட அத்வானி, 1980-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன உறுப்பினா்களில் ஒருவராக இருந்தாா். மேலும், கட்சியின் மிக நீண்ட காலம் தலைவராக இருந்தாா். கட்சியின் சித்தாந்தம் மற்றும் தோ்தல் உத்திகளை வடிவமைப்பதில் அவா் முக்கியப் பங்கு வகித்தாா். அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் (1999-2004), துணைப் பிரதமராவதற்கு முன்பு அத்வானி முதலில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றினாா்.
பிப்ரவரி 5 -ஆம் தேதி நடைபெற்ற தில்லி தோ்தலில் பாஜக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றது. 70 இடங்களில் 48 இடங்களை வென்று 26 ஆண்டுகளுக்குப் பிறகு தலைநகரில் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தில் வெற்றி பெறவில்லை.
12ஈஉகதஉஓ
பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானியை புதன்கிழமை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்ற தில்லி முதல்வா் ரேகா குப்தா.