கேரளத்துடனான பந்தம் ஆயுளுக்கும் இருக்கும்: விடைபெறும் ஆளுநர் ஆரிஃப் முகம்மது கான...
ஏஐ தொழில்நுட்பம் மனித இனத்தை அழிக்கும்: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனித இனத்தை அழிக்க 20% வாய்ப்புள்ளது என பிரிட்டன்-கனடிய விஞ்ஞானியும் இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஜெஃப்ரி ஹிண்டன் எச்சரித்துள்ளார்.
பேராசிரியர் ஜெஃப்ரி ஹிண்டன் (77) செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் காட்ஃபாதர் என அழைக்கப்படுகிறார். ஏஐ தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளில் பெரியளவில் பங்கு வகித்த இவர், அதன் விரைவான வளர்ச்சியைத் தொழில் புரட்சியுடன் ஒப்பிட்டிருந்தார். ஆனால், இந்த முறை இயந்திரங்கள் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளலாம் என்றும் முன்னரே எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில், தனியார் செய்தி நிறுவனத்துக்கு ஜெஃப்ரி ஹிண்டன் சமீபத்தில் அளித்த பேட்டியில், ஏஐ தொழில்நுட்பம் குறித்த அவரது ஆய்வியல் பார்வை மாறுபட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “பெரிதாக இல்லை. அதற்கு இன்னும் 10 முதல் 20 ஆண்டுகள் ஆகலாம். நாம் இதற்கு முன்னர் நம்மைவிட மிக புத்திசாலித்தனமான விஷயங்களை இப்போது இருக்கும் அளவில் எதிர்கொண்டதில்லை.
இதையும் படிக்க | மன்மோகனின் அரசியல் துணிவு இல்லாமல் இந்தியா-அமெரிக்க நல்லுறவு ஏற்பட்டிருக்காது: பைடன்
அதிக அறிவாற்றல் உள்ள ஒரு விஷயத்தை குறைந்த அறிவாற்றல் உள்ள ஒரு விஷயம் கட்டுப்படுத்தும் என்பதற்கு எத்தனை உதாரணங்கள் உங்களுக்குத் தெரியும். அதற்கு மிகக் குறைந்த உதாரணங்களே உள்ளன” என்று தெரிவித்தார்.
அடுத்த 30 ஆண்டுகளில் ஏஐ தொழில்நுட்பம் மனித இனத்தை அழிக்க 10 முதல் 20 சதவீதம் வாய்ப்புள்ளதாகக் கூறிய ஜெஃப்ரி ஹிண்டன், “ஏஐ தொழில்நுட்பம் நான் நினைத்ததை விட மிக வேகமாக முன்னேறி வருகின்றது. மனித இனத்தை மூன்று வயது குழந்தையைப் போலவும் செயற்கை நுண்ணறிவை பெரியவர்களுக்கு சமமானவர்களாக ஆக்கும் நிலைக்கு இந்த தொழில்நுட்பம் வளரும்.
நாம் இப்போது இருக்கும் நிலையை அடைய வெகுகாலம் ஆகும் என்று முன்பு நான் நினைத்தேன். ஆனால், இவ்வளவு விரைவில் இது முன்னேற்றமடையும் என்று எதிர்பார்க்கவில்லை.
இதையும் படிக்க | 2024 - மோடி முதல் அம்பேத்கர் வரை பேசுபொருளான சர்ச்சைகள் ஒரு பார்வை!
இப்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்களை விட அறிவார்ந்து யோசிக்கும் ஏஐ தொழில்நுட்பம் அடுத்த 20 ஆண்டுகளில் வரக்கூடும் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். இது மிகவும் அச்சுறுத்தக்கூடியதாக இருக்கின்றது.
என்னுடையக் கவலை என்னவென்றால் ஒரு கண்ணுக்குத் தெரியாத கை நம்மை ஒருபோதும் காப்பாற்றாது. எனவே, பெரிய நிறுவனங்களின் லாப நோக்கத்திற்கு இந்தத் தொழில்நுட்பத்தை விட்டுவிடுவது அவர்கள் பாதுகாப்பாக அதனை செயல்படுத்துகிறார்களா என்று உறுதிபடுத்தாது. இந்த ஆய்வினைக் கட்டுப்பட்டுத்த அரசாங்கம் விதிமுறைகளைக் கொண்டு வரவேண்டும். அப்போது மட்டுமே இது கட்டுப்படுத்தப்படும்” என்று கூறினார்.