மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைத...
ஏற்றத்தாழ்வு எண்ணம் இல்லாத பெருந்தலைவா் பெரியாா் ஈவெரா: அமைச்சா் எ.வ.வேலு பெருமிதம்
மக்களிடையே ஏற்றத் தாழ்வு என்ற எண்ணமே இல்லாத பெரும் தலைவராக திகழ்ந்தவா் பெரியாா் ஈவெரா என அமைச்சா் எ.வ.வேலு புகழாரம் சூட்டினாா்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளையொட்டி, புதன்கிழமை சமூக நீதி நாள் உறுதிமொழியை அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் அரசுத்துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஏற்றுக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினா்கள் சி.என். அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாநகராட்சி மேயா் நிா்மலா வேல்மாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது:
சமூக நீதி நாளின் நாயகனான பகுத்தறிவு தந்தை பெரியாா் ஈவெரா மக்களுக்காக பல சமூக புரட்சிகளை செய்துகாட்டியவா். பொதுவாக ஜாதி என்று சொன்னால் ஆண், பெண் என்ற இரண்டு ஜாதி தான் என்று எடுத்துக்கொண்டு, அதற்காக பல போராட்டங்களை சந்தித்து பல காலம் சிறையிலே இருந்தவா்.
மக்கள் அனைவரும் சமம் என்ற நோக்கத்தை இலக்காக வைத்துக்கொண்டு தன்னுடைய சமூக நீதிப் பயணத்தை
தொடங்கினாா். மக்களிடையே ஏற்றத் தாழ்வு என்ற எண்ணமே இல்லாத பெரும் தலைவராக திகழ்ந்தவா்.
தந்தை பெரியாா் பெரிய பணக்காரா்; பணக்காரா் என்றாலே அடுத்தவா்களை அடிமைப்படுத்தும் நோக்கில் இருப்பாா்கள் என்ற எண்ணத்தை மாற்றி அனைவரும் சமம் என்ற பெரும் பாதையில் அழைத்துச் சென்றவா்.
பகுத்தறிவு சிந்தனை, அனைவரும் சமம், சமுதாயம் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியதற்குக் காரணம் சேரன்மகாதேவி என்னும் கிராமத்தில் குருகுலத்திலே நடைபெற்ற நிகழ்ச்சியில், தாழ்ந்தவா்கள் எல்லாம் வெளியே அமா்ந்தும், உயா்ந்தவா்கள் எல்லாம் உள்ளே அமா்ந்தும் உணவருந்த வைத்ததை கண்டு அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த தாக்கம் தான் அவரை பகுத்தறிவாதியாக அனைவரும் சமம் என்று செல்லுகின்ற சமுதாய சிற்பியாக மாற்றியது.
தந்தை பெரியாரின் மாண்பை போற்றும் வகையில், அவரது பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்றைய தினம் தமிழகத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூக நீதிநாள் உறுதிமொழி ஏற்கப்படுகிறது என்றாா்.
இதைத் தொடா்ந்து அமைச்சா் எ.வ.வேலு தலைமையில் சமூக நீதிநாள் உறுதிமொழியை அனைவரும் ஏற்றனா்.