ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதை வென்ற ஷுப்மன் கில்!
ஐசிசியின் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் வென்றுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரில் இந்திய அணியை இளம் வீரர் ஷுப்மன் கில் சிறப்பாக வழிநடத்தினார். அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் தொடரிலேயே ஷுப்மன் கில் பல்வேறு சாதனைகள் படைத்தார்.
கடந்த மாதத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஷுப்மன் கில் 94.50 சராசரியுடன் 567 ரன்கள் குவித்துள்ளார். அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதையடுத்து, சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்களான பென் ஸ்டோக்ஸ் மற்றும் வியான் முல்டரை பின்னுக்குத் தள்ளி ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை ஷுப்மன் கில் வென்றுள்ளார்.
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை வென்றது குறித்து ஷுப்மன் கில் பேசியதாவது: ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரருக்கான விருதினை வென்றது சிறப்பான உணர்வைத் தருகிறது. இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு இந்த விருதினை முதல் முறை வென்றுள்ளது மிகவும் சிறப்பானது. பர்மிங்ஹாமில் இரட்டைச் சதம் விளாசியதை என் வாழ்நாளில் எப்போதும் நினைத்து மகிழ்வேன்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது. இந்த தொடரில் இரண்டு அணிகளும் மிகவும் சிறப்பாக விளையாடினோம். இந்த டெஸ்ட் தொடரை இரண்டு அணிகளின் வீரர்களும் நீண்ட காலத்துக்கு நினைவில் வைத்துக் கொள்வர். ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரராக என்னை தேர்ந்தெடுத்ததற்கு தேர்வுக்குழுவுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அணிக்காக இதுபோன்று பல விருதுகளை வெல்ல விரும்புகிறேன் என்றார்.
Setting new standards with the bat
— ICC (@ICC) August 12, 2025
Capping off an incredible summer in whites is the ICC Men’s Player of the Month for July 2025
ஐசிசியின் சிறந்த வீரருக்கான விருதினை நான்காவது முறையாக வெல்லும் முதல் வீரர் ஷுப்மன் கில் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாக, கடந்த 2023 ஆம் ஆண்டு இரண்டு முறையும் (ஜனவரி மற்றும் செப்டம்பர்), கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் சிறந்த வீரருக்கான விருதினை ஷுப்மன் கில் வென்றுள்ளார்.
இதையும் படிக்க: டெவால்டு பிரெவிஸ் 125*: ஆஸி. வெற்றிபெற 219 ரன்கள் இலக்கு!